விசித்திரப் பாவாய்

குங்கும நிற வானத்தில்
கருத்த மேகமெனும் புகை ....
விசித்திரம் இல்லை--- ஆனால்
சித்திரப் பெண்ணே!!!---உன்னுடைய
விரிந்த கூந்தல்
கார்மேகம் பூத்த சிகை....அதனுள்
குங்குமம் போன்ற செந்நிற முகம்...
விசித்திரமன்றோ இது!!!

மூச்சை அடக்கி கடலுக்குள் மூழ்கி
முத்தெடுப்பார்கள் சிப்பிக்குள்ளிருந்து
முடியாதது இல்லை---ஆனால்
மெல்லின அழகே!!!---உன்னுடைய
முல்லை இதழ் விரிப்பு
முயற்சி சிறிதும் இல்லாமல்....எளிதாய்
முத்தெடுக்கலாம் உன் சிரிப்புக்குள்ளிருந்து...
மலைக்க வைப்பதன்றோ இது!!!

ஆறு வேகமாய் சுழன்று வரும்
அழகான மீன்கள் அதில் துள்ளும்
அதிசயம் இல்லை---ஆனால்
அழகிய கண்ணே!!!---உன்னுடைய
ஆரவாரமற்ற அழுகை
அசையாத மீன் விழிகள்...உள்ளிருந்து
அருவி போல ஊற்றெடுத்து வரும் கண்ணீர்...
அதிசயமன்றோ இது!!!


தென்றல் காற்று வீசும்போது கொடி
தானாய் அசைந்து ஆடிக்கொண்டிருக்கும்
அழகில்லாமல் இல்லை---ஆனால்
மலர் மல்லிகையே!!!---உன்னுடைய
மின்னல் இடை அழகு
பொற்சிலை ஒன்று நடை பழக....நானோ
கற்சிலையாய் நின்றேன் கொடி இடை நடனம் கண்டு...
மிஞ்சும் அழகன்றோ இது!!!

குழல் இனிது யாழ் இனிது அதை விட
குழவியின் சொல் இன்பத்தை கொடுப்பது
மறுப்பதற்கில்லை---ஆனால்
குளிர் நிலவே!!!---உன்னுடைய
குயில் குரல் கீதம்
கலைமிகு லயத்தோடு இசைத்தாய்....தேவ
கானம் பாட உன் மலர்வாய் மலர்ந்தாய்...
கவின்மிகு இனிமையன்றோ அது!!!


இயற்கை நமக்கு அளித்த பல
இனிய பரிசுகளுக்கு பதிலாய்...
வணங்குகிறோம் கடவுளாய்---ஆனால்
கலைப் பாவையே!!!---உன்னை
ஈன்ற தாய் தந்தை!!!
இந்த உலகிற்கு உன்னை தந்தார்கள்...அவர்களை
இரு கரம் குவித்து வணங்க வேண்டும் ....
வாழும் தெய்வங்களன்றோ அவர்கள்!!!

எழுதியவர் : kothai (8-Jan-14, 3:36 pm)
பார்வை : 116

சிறந்த கவிதைகள்

மேலே