எல்லாமே களவாணி பயதான்

"நல்ல நடு சென்டர் சீட்டா பாத்து உக்காரு.

வழியில கண்டதையும் வாங்கி சாப்பிடாத.."


"சரி மா.. நான் பாத்துக்கிறேன் மா.. நான் என்ன சின்ன பைய்யனா?"


" சரிங்க சார்..
மறுபடியும் ஊர் வம்பு ஏதும் இல்லாம படிச்சிட்டு வீட்டுக்கு வர்ற வழிய பாரு.. காதுல விழுதா??"

"ம்ம்ம்.. (தலை குனிந்தபடியே)"


"எல்லாம் எடுத்துக்கிட்டியா? வாட்டர் பாட்டில் எடுத்துக்கிட்டியா??"

என்று வழக்கமான தாய் பாசத்துடன் விடுமுறை கழிந்து கல்லூரி திரும்பும் சேகருக்கு வள்ளி வழிவாசகம் கூறினாள்.


"டாட்டா மா.. பாய் பா.."


"போனதும் மறக்காம ஃபோன் பண்ணுடா.."


காதில் வாங்கியவாறு கை அசைத்துக் கொண்டே சாலையை கடந்தான் சேகர்..


"அம்மா பஸ்ல போக சொல்றா??அந்த அம்மாவோ, ரயில்ல போக சொல்றாங்க??
பஸ்னா முந்நூறு.. ட்ரெய்ன்னா நூத்தி மூனு.."
என்று சிந்தைக்கு வேலை கொடுத்துக்கொண்டே பேருந்தில் ஏறி அமர்ந்தான்.


"கண்டக்டர்.. ஒரு ரயில்வே ஸ்டேஷன் கொடுங்க"

"எக்ஸ் க்யூஸ் மீ.. இது லேடீஸ் சீட்டுன்னு நினைக்கிறேன்"
மகளிர் உரிமை மாடர்ன் மங்கை உருவில்.

"ஹ்ம்ம்.. முன்னாடி இடம் இருந்தாலும் நம்மல எழுப்பிட்டு உக்கார்றதுலதான் அந்த 33% இருக்குபோல."
முணுமுணுத்துக்கொண்டே எழுந்து நின்றான் சேகர்.

இசைப்புயலும் இசைஞானியும்தான் இப்பொழுது அவனது கால்களுக்கு மருந்தாகினர்.

"ரயில்வே ஸ்டேஷன் எல்லாம் இறங்கு"

அரைமணி நேர வியர்வை குளியலுக்குப் பிறகு கண்டக்டரின் அந்த வார்த்தைகள் அவனுக்கு ஏசி போட்டதைப் போல் இருந்தது.

"ரயில்லயாவது கரெக்டா இடம் புடிக்கனும்"
என்று எண்ணிக்கொண்டே பேருந்திற்கு விடை சொன்னான்.

தலைக்கு பத்து கொடுத்து சேர்ந்த கூட்டம் போல நடைமேடை நிறைந்திருந்தது. திகைத்துப் போனான் சேகர்.

உழைத்த களைப்பு பலரின் உடலில் தெரிந்தாலும் கண்களில் இரயில் வரவின் எதிர்பார்ப்பே அதிகமாக இருந்தது.

ஹெவி காம்படிஷன் தான்..!!

எப்படியாவது இடம் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான். சேகருக்கு மட்டுமல்ல அனைவருக்கும்.

"ஸ்டேட்ல மணி பத்தர. சென்ட்ரல்ல இன்னும் ஒன்பதர ஆகல போல." எப்போதான் ட்ரெய்ன் வரும்னு காத்திருந்த கண்களுக்கு விருந்தாக ஆரவாரமின்றி அசைந்து வந்தது. ஆனால் பார்த்து ரசிக்க தான் நேரமில்லை.

வழக்கம் போல அரசாங்கத்தை பழித்துக்கொண்டு கூட்ட நெரிசலுக்கிடையில் ஜன்னல் சீட்டு இடம் பிடிப்பதற்கு சேகரின் ஒரு மாத வீட்டு சாப்பாடு உதவியது.

"நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி - மதுரை - திண்டுக்கல் - கரூர் - ஈரோடு வழியாக கோயம்புத்தூர் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் தடம் ஒன்றிலிருந்து புறப்பட தயாராக உள்ளது" என் ஒலிகேட்டதும் சேகரின் எதிரில் அமர்ந்திருந்த பெண் "நல்லவேளைங்க புதன்கிழமையா பாத்து கிளம்புனோம்.. கூட்டமில்ல" என்று பெரிதாக சாதித்துவிட்டது போல புன்னகையுடன் தன் கணவனிடம் பகிர்ந்து கொண்டாள்.


"வெளியே இருந்த கூட்டம் உள்ள இல்லையே?!!" வியப்புடன் தன் அருகில் இருந்த காலி இருக்கைகளை நோட்டமிட்டான் சேகர்.

"இன்னைக்கு நிம்மதியா ஃப்ரீயா போகலாம்"

அவன் வியப்புக்கு பதில் மிகவும் விரைவாக தள்ளாடியபடி வந்து அமர்ந்தது அவன் அருகில்.

"தம்பி எங்க போறீங்க?"

சேகரின் மூக்கிற்கு வேலை அதிகமாக இருந்ததால் அவனால் பதிலளிக்க முடியவில்லை.

"என்னத்த குடிச்சிட்டு வந்தானோ? எந்திருச்சு வேற இடத்துக்கு போக வீணா ரிஸ்க் எடுக்கவும் மனசில்ல.. நம்ம ஹாஸ்டல் ரூம்மெட் மாதிரி இன்னைக்கு இவனையும் எப்படியாவது சமாளிப்போம். " என கஷ்ட்டப்பட்டு "கோயம்புத்தூருங்க" என்றான்.

இருக்கைகள் அனைத்தும் விரைவாக நிரம்ப ஆரம்பித்தன.


ஆனால் சேகரின் இருக்கையில் நம் குடிமகன் இருந்ததால் இருக்கையின் அந்த முடிவில் மட்டும் ஒருவர் அமர்ந்தார்.

பின் வந்தவர்களும் மேலிருந்த லக்கேஜோடு ஐக்கியமாகினர். அதுசரி.. அன்ரிசர்வ்டு பயணி என்றாலே லக்கேஜ் தானே..!!

அதை தொடர்ந்து வந்த மக்கள் யாரும் அங்கு உட்காரமல் வேறு இடம் தேடி சென்றுவிட்டனர்.

இறுதியில் வந்த நண்பர் ஒருவர்,

"ஏங்க.. கொஞ்சம் தள்ளி உக்காருங்க"

"வேணும்னா நீ அவன் பக்கத்துல போய் உக்காருயா"

"அதுக்கு நான் நின்னுட்டே போயிடுவேன்" என வேறுவழியின்றி நின்றுகொண்டார்.

"அதுவும் சரிதான். எங்க போறீங்க? உங்க பேரு என்ன?"

"இராமநாதன். ஈரோட்டுல துணிக்கட வச்சிருக்கேன். தங்கச்சிய பாத்துட்டு போலாம்னு வந்தேன்"

"ஓ.. அப்படியா.. நான் சிவசாமி. கரூர்ல ஃப்ரண்டு கல்யாணத்துக்கு போறேன்."

இரயில் மெல்ல நகர ஆரம்பித்தது.

எதிரில் நாங்கு பேர்; அருகில் இரண்டு பேர்; ஒருவர் நின்றுகொண்டிருக்க பயணம் தொடங்கியது;

அனைவரும் நம் போதை ஆசாமியை கண்களை சுருக்கி கேவலமாக பார்த்துவிட்டு பயணத்தை இரசிக்க தொடங்கினர்.

"சார் எங்க போறீங்க? ; படிக்கிறீங்களா? வேல பாக்குறீங்களா? ;

ஆளுங்கட்சி ; எதிர்கட்சி ; அடுத்த ஆட்சி;

முதலமைச்சர் ; பிரதமர்;

கொலை ; கற்பழிப்பு ; விலைவாசி ;

தோனி ; சச்சின் ;

தலையோட அடுத்த படம்;

மாமியார் கத; பக்கத்துவீட்டு கத; "

என இரயில் பயணத்திற்கே உரிய அம்சங்கள் நிறைந்திருக்க கோவில்பட்டி கடந்தது.

பாவம், சேகருக்கு ஜன்னல் கம்பிகளும் நிலவும் மட்டுமே துணையிருந்தன.

"செருப்பு பிஞ்சிரும்.. குடிகார நாய..

ஏங்க.. இவன கொஞ்சம் என்னன்னு கேளுங்க "

"போதைய போட்டுட்டு ரயில்ல ஏறி அடுத்தவன் பொண்டாட்டி மேல கை போடுறது??"

பளார்.. பளார்.. என்று சத்தம் கேட்டு சேகர் தன் வலதுபுறம் திரும்பினான்..

ராமநாதன் தன்னைப்போல்; தன்னைவிட பலமான ஒரு சமூக ஆர்வலர் என்பது அப்போதுதான் சேகருக்கு தெரிந்தது..

அவர் அந்த போதைபித்தனை காது கிழிய அடித்தார்.

"இப்போ நீங்க என்ன அடிச்சாலும் அவனுக்கு தெரியபோறது கிடையாது"

என்று விஞ்ஞானமாக சிவசாமி தடுத்து நிறுத்தினார்.

"இந்த மாதிரி ஆளுங்களயெல்லாம் சும்மாவிட கூடாதுங்க.. சுத்தி நாலுபேர் இருக்கும் போதே இப்படிலாம் பண்றானுங்க.. .... ... " என்று உணர்ச்சி பொங்க வசனங்களை அள்ளி வீசினார் ராமநாதன்.


"உனக்கு உக்கார்றதுக்கு இடமில்லன்னு பொங்காதயா.." என்று உள்ளே நினைத்து கொண்டு "சரிதாங்க.. நீங்க செஞ்சது சரிதாங்க.." என்று சிவசாமி சமாதானம் செய்தார்.

நம் குடிமகனோ, தலையை சொறிந்து கொண்டே நித்திரைக்கு சென்றார்..

சேகர் உட்பட அனைவரும் ராமநாதனை மரியாதையுடன் பார்வையிட்டனர்..

இந்த சலசலப்பு, உறங்க தயாராக இருந்த அனைவரையும் நைட் வாட்ச்மேன் ஆக்கியபோதும் சேகர் மட்டும் வேறு வழியின்றி உறங்கத் திரும்பினான்.

சற்று நேரம் அமைதியில் கழிய மதுரை விசயம்..

மதுரையில் மட்டும் மக்கள்தொகைக்கு பஞ்சமா என்ன??

மக்கள் அடித்து பிடித்து கொண்டு ரயிலில் ஏறினர்.

இதுவரை அயராமல் நின்று கொண்டிருந்த ராமநாதனின் கால்கள் குடிமகனின் நெருங்கிய தோழன் போல் அவர் அருகில் சென்று தஞ்சம் அடைந்தது.

"அய்ய.. இதெல்லாம் யாரு உள்ளவிட்டது??

கருமம்.. எங்க இருந்துதான் வர்றாங்களோ??

சரிதான்யா?? இதுங்களுக்கிட்டயெல்லாம் எவன் டிக்கெட் கேக்குறான்?? எங்கயாது ஏறுறது.. எங்கயாது இறங்குறது..

வாக்கரிசிக்கு வக்கில்ல.. வதவதன்னு பிள்ளய மட்டும் பெத்துக்கிறது.."

என்று ராமநாதன் உட்பட பல குரல்களின் வசைப்பாட்டு கேட்டு சேகர் கண்விழித்தான்.

"அடடே!! என்ன அதிசயம்.. நம்ம சீட்ல நாலு பேரா..!!! அதுவும் ராமநாதன் போதக்காரன் பக்கத்துலயா?? அப்படி என்ன நடந்துச்சு"

எட்டிப் பார்க்கிறான்..

அவன் கண்ட காட்சி, அவன் கண்களுக்கும் இதழ்களுக்கும் கண்ணீரால் பாலம் கட்டியது.

ராமநாதன் நின்ற இடத்தில் நரிக்குறவர்களும் அவர்களது குழந்தைகளும் குரங்குக்குட்டிகளும் அமர்ந்திருந்தனர்..

இப்போது போதைக்காரன் நல்லவனாகிவிட்டான்.. அவனை யாரும் கண்டுகொள்ளவுமில்லை..

"இந்த மாதிரி குடிகாரனையெல்லாம் சும்மா விடக்கூடாதுன்னா உன்ன மாதிரி ஆளுங்களயெல்லாம் என்னயா பண்ணுறது??" என்று சேகர் ராமநாதனைப் பார்த்து தன் மனதுக்குள்ளேயே கேட்டுக்கொண்டு கண்ணீர் துளிகளில் பதில் கூறிக்கொண்டான்.

சமூக ஆர்வலர் ராமநாதன் சற்று கர்வமும் ஏளனமும் நிறைந்த குரலில் அந்த குற சிறுவனிடம், "எங்கயா போனும்??" என்று மிரட்டிக் கேட்டான்.

அச்சிறுவன் கண்களை அகலமாக்கி "நீ பேசுவது புரியவில்லை" என்று பார்வையிலேயே பதிலளித்தான்..

"கொழந்தையும் அப்படிதான் இருக்கு.. கொரங்கும் அப்படிதான் இருக்கு.." என்று கேலியாக கூறினான் ராமநாதன். இதற்கு சேகரைத் தவிர, உடனிருந்த அனைத்து பயணிகளும் சிரித்தனர்.

பாவம்!! அந்தச் சிறுவனுக்கு இந்த அரிதார மனிதர்களின் மொழியும் புரியவில்லை. புரிந்தாலும் உரிமையை கேட்கவும் முன் வந்திருப்பானா என்று ஐயம்தான்.

அப்போது அந்த சிறுவனின் தாயார் ராமநாதனிடம் தனக்கு தெரிந்த மொழியில் "கரூர் வந்தா சொல்லுறீங்களா??" என்று கேட்டிருப்பாள் என்று நினைக்கிறேன். ஏனெனில், அவள் பேசிய வார்த்தையில் கரூர் மட்டும்தான் புரிந்தது..

"ம்.. ம்.. சரி.. சரி.." என்று கூறினான் ராமநாதன்.

அடுத்த ஒரு மணிநேரத்திற்கு இந்தப் பாவிகள் அவர்களைதான் கைபொம்மையாகவும் கேலிப்பொருளாகவும் கொண்டு பொழுதுபோக்கினர்.

ரயில் தனது அடுத்த இலக்கை அடைந்தது..

ராமநாதன், அவர்கள் முன்பு கைகளை அசைத்து "கரூர்.. கரூர்.." என்று கத்தினான்.

அந்த அம்மா புன்னகையுடன் கல்லை கும்பிடும் பக்தன் போல கைகளை கூப்பி வணங்கி நன்றி உரைத்துவிட்டு தன் சொந்தங்களுடன் ரயிலைவிட்டு இறங்க தயாராகினர்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சேகருக்குள் ஒரு குருக்ஷேத்திரம் யுத்தமே நிகழ்ந்தது..

"இது கரூர் இல்ல.. திண்டுக்கல்.. இறங்காதீங்க.." என்று கூறவேண்டும் என துடித்தான்..

"இருந்தாலும் இந்த பாவிங்க மத்தியில இருக்குறத விட அவங்க போறதே மேல்" என்று தனக்குத்தானே சமாதானம் கூறிக்கொண்டான்.

"மொழியும் தெரியாம இராத்திரி 2 மணிக்கு அவங்க எங்க போவாங்க" என நினைத்து அவர்களுக்காக அவனால் கண்ணீர் மட்டுமே சிந்த முடிந்தது..

இதயமே இல்லாத ஒருவன், "சூப்பர்ங்க.. கலக்கிட்டிங்க" என்று எழுந்து வந்து ராமநாதனிடம் கை குலுக்கிச் சென்றான்.

சேகரோ, திரும்பிய கழுத்துடன் ஜன்னல் கம்பி வழி திண்டுக்கல் சந்திப்பை உற்று நோக்கியவாறு, தன் படிப்பு யாருக்கும் பயனின்றி போனதை எண்ணி வருத்தத்துடன் இமைகளை உறவாடவிட்டான்.

"வெல்கம் டூ கோயம்புத்தூர் ஜங்க்ஷன்"


கண்களை விழித்து தன் பையை எடுத்துக்கொண்டு இறங்கும்வரை சேகருக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது தெரியாது..

"தம்பி.. டிக்கெட் எங்கப்பா??"

எடுக்காத டிக்கெட்டை பைகளை துளாவிவிட்டு, கோழி திருடிய பூனைபோல முழித்தான் சேகர்.

"டிக்கெட்ட எடுப்பா சீக்கிரம்.. என்ன டிக்கெட் எடுக்கலயா??? வித்தவுட்டா???"

"சார்.. சார்.. சார்.. இந்த ஒரு தடவ மன்னிச்சு விட்டுருங்க சார்.. டைம் ஆன அவசரத்துல டிக்கெட் எடுக்காம வந்துட்டேன் சார்.. ப்ளீஸ் சார்.."

"அதெல்லம் தெரியாது.. 650 ரூபா ஃபைன எடு.."

"சார்.. நான் காலேஜ் ஸ்டூடென்ட் தான் சார்.. பி.பீ.பி காலேஜ்ல தான் சார் படிக்குறேன்"

"படிச்சவன்.. படிக்கிறவன் தான்யா தப்பெல்லாம் பண்ணுறீங்க.. எவ்ளோதான் காசு வச்சுருக்க??"

"210 ரூபா இருக்கு சார்"

"சரி.. எடு "

"இந்தாங்க சார்"

"200 தான் இருக்குது?"

"பஸ்-க்கு காசு இல்ல சார்"

"காசு இல்லனா நடந்து போ.. எனக்கு எல்லாம் பெர்ஃபெக்ட்டா இருக்கனும். கொடுத்திட்டு கிளம்பு"

210ரூபாய் கொடுத்துவிட்டுச் சென்றான் சேகர்.

"ஐய்யய்யோ!!! மறந்தே போயிட்டேன்" என்று கைப்பேசியை எடுத்து டயல் செய்து,

"ஹலோ.. ஹலோ.. சாரி டார்லிங்.. ஃபோன் பண்ண மறந்திட்டேன்..

அது வேற ஒன்னுமில்ல, ட்ரெயின்ல வரும்போது.. .. .. ... ... (மாம் காலிங்..)

எனக்கே பாவமா இருந்துச்சு.. அதான் உங்கிட்ட பேச முடியல..

யு நோ?? இதெல்லாம் ஒரு கதையா எழுதலாம்னு இருக்கேன்.. ... .... .... " (மாம் வெயிட்டிங்)

**********XXXXXXXXXXXXXXXXXXXXXX************

ஒவ்வொருத்தனுக்குள்ளயும் ஒரு வேலாயுதம் ஒரு போதிதர்மன் ஒரு பவானி ஐ.பி.எஸ் மாதிரி ஒரு அய்யோக்கியனும் இருக்கான்..!! [ரொம்ப நாளா எழுத நினச்சது.. இன்னைக்கு எழுதிட்டேன்.. படிச்சு பாத்தா, மறக்காம கருத்து சொல்லுங்க.. (பச்சயா திட்டனும்னாலும் திட்டலாம்) அனைத்தும் வரவேற்கப்படுகின்றன..]

எழுதியவர் : கார்த்திக் சு (8-Jan-14, 4:06 pm)
பார்வை : 203

மேலே