கைநாட்டுக் கவிதைகள் 16
பங்காளி!
தேவரு வீட்டு
மஞ்சரட்டு மாடுன்னாலே
சுத்துப்பட்டு
கிராமங்களுக்கும்
சுத்தமா தெரியும்
மனுச, மக்களோட
அளாவுறதைவிட
தேவரு,
மாடுகளோட
நேரங்கழிக்கிறதே அதிகம்
சினிமா நடிகரு
செந்தாமரை கணக்கா
இருப்பாரு!
முழுக்கை வச்ச
சட்டய தச்சு
அத முக்கா கையா
மடிச்சு விட்டிருப்பாரு
அவரு கடந்து
போகும்போது
அத்தர் வாட
சுத்தி அடிக்கும்
தன்னோட மாடு
எப்பவாவது
புடிபட்டுப் போச்சுன்னா
அடிமாட்டு வெலைக்கி
அங்கேயே
வித்துப்புட்டுதான்
வீடு திரும்புவாரு
இப்பகூட
பத்தாயிரம் ரூபாய்க்கி
சொக்கிகுளம் போயி
ஒரு காளைய வாங்கியாந்து
சிறாவய
மஞ்சரட்டுக்குள்ள
மாட்டை ரெடி
பண்ணணும்னு
பாடாப் பட்டாரு
திமில உருவிவிட்டு
ஒசரமாக்குறதுக்கு
ஒரு ஆளு
கொம்பு சீவுறதுக்கு
ஒரு ஆளுன்னு
அந்தக் காளையோட
ஒவ்வொரு அங்கங்களுக்கும்
ஆள் வச்சி
மாட்டை தயார் பண்ணினாரு!
இஞ்சி, வெங்காயம்
தெனக்கி இடிச்சி
கொட்டத்துல
மாட்டுக்கு புகட்டுவாரு
அப்பத்தான்
நின்னு பாயிறதுக்கு தோதா
மாட்டுக்கு
இளைப்பு வராதாம்!
காரந்தாங்காம
அதுக்கு
வாநீரு வடியும்
நாக்கால நக்கி நக்கி
கட்டுத்தொரையில
அது படுற பாடு
பாக்கவே பாவமாயிருக்கும்....
'வக்காளி'
தேவரு மாடு
வருதுன்னாலே
தூர நின்னு
பாக்குறவனுக்கு
ஒன்னுக்கு போகணும்.
என் மாட்டை
தொட்டு பாக்குறவனுக்கு
உசிரு போகணும்னு
சொல்லிக்கிட்டே
மீசையை தடவியவாறே
ஜிப்பாக்குள்ள
கைய விட்டு
சொக்கலால்
பீடிய பத்த வச்சி
சொகமா இழுப்பாரு
"மேச்சலுக்கு அனுப்புனா
பசு மாட்டப் பாத்து
பல்லிளிக்கும்"னு
கட்டுத்தொரையிலயே
கட்டிப்போட்டு
சீமப்புல்லும்
கம்மந்தட்டையும் போடுவாரு
அடக்குக்கு போனா
சக்தி வீணாயி
சவச்சவன்னு ஆயிரும்
ஒரு வேகம் இருக்காது
வடிகாலுக்கு வழியில்லாம
காமம் தலைக்கேறுனாதான்
காளை மாட்டுக்கு
கடுங்கோபம் வரும்!
அப்பத்தான்...
எதிர்ப்பட்றவன்
எவனாயிருந்தாலும்
ஈவு இரக்கமில்லாம
குத்தும்னு
வெளக்கம்
வேறு சொல்லுவாரு
ஒரு வழியா
காளை தயாராகி
கம்பீரமா நின்னுச்சு.
ராங்கியம்
சின்னப்பன் ஆசாரிக்கிட்ட
ஆர்டர் குடுத்து
வெள்ளியில
நெத்திப்பாறை அடிச்சு
காளை நெத்தியில
கட்டி விட்டாரு
கன்னிப் பொண்ணு
கழுத்துல நெக்லஸ்
போட்ட மாதிரி
அம்புட்டு அழகா இருந்துச்சு
கும்பகோணம் போயி
ஆர்டர் கொடுத்து
கலர் கலரா
குஞ்சம் வச்ச
சலங்கை வாங்கியாந்து
கழுத்துல
கட்டி விட்டாரு
பட்டு வேட்டியில
ஐநூத்தியோரு ரூபாய
வெத்தல பாக்கோட
மடிச்சு வச்சுக் கட்டி,
மாட்டுக்கொம்புல கட்டிவிட்டாரு
வெளக்கெண்ணய
காளை உடம்புல
தேச்சி விட்டாரு
குறிப்பா
வால்ல
நல்ல தேச்சாரு
"அப்பத்தான்....
மாடு புடிக்கிறவன்
சவுல்போடத்
தொட்டாலே வழுக்கும்"னு
கலுக்குன்னு சிரிச்சாரு
ஒரு வழியா....
சிறாவய மஞ்சரட்டுக்கு
மாடு பொறப்பட்டுச்சு
பத்து மைல் தூரம்
நடந்து கூட்டிப்போனா
மாடு பொட்டலுக்கு
போய்ச்சேரும்போது
அசந்து போகுமுன்னு....
டெம்போ வேனுல ஏத்தி
தேவரு கொண்டு போனாரு
அவரோட ஒன்னு விட்ட
பங்காளி கலியனும்
கூடப்போனான்.
வண்டி வயிரம்பட்டியத்
தாண்டும்போது
பங்காளி கலியன்,
"அண்ணே!
நம்ம மாட்ட
குறி வச்சு
டொங்கான் குரூப்பு
வந்திருக்கானுங்களாம்!
அதனால....
ஒரு ஃபுல்
ரம்மு வாங்கி
பேரிச்சம்பழத்துல
பெசைஞ்சுக்கிட்டு
நறுக்குன்னு
ஏத்தி விட்டோம்னா,
நம்ம காளைய தொடுறவன்
அவன் ஆத்தாகிட்ட
குடிச்ச தாய்ப்பால
நிச்சமயா
கக்கிப்புடுவான்"னு
தேவருக்கு வெறியேத்திவிட
'பங்காளி சொல்றது
சரிதான்'னு
ஒரு பாட்டில் ரம்மு வாங்கி
பழத்துல பிசைஞ்சு
காளைக்கு புகட்டி
விட்டுருக்காக
கண்ணுல வெறியோட
தேவர் வீட்டு காளை
மண்ணை வாரி எறச்சிக்கிட்டு
பாயுறதுக்கு தயாருன்னு
ஆவேசமா நின்னுருக்கு
அதோட விட்டானா
பாவி பங்காளி
"கொம்பு நுனியில
அரளி வெதய நச்சுக்கிட்டு
தேச்சி விட்டோம்னா,
மாடு குத்துன ஒடனே
வெசம் ஏறி
கதை வெரவா முடியும்"னு
மறுபடியும் வெறியேத்த...
தேவரு அதையும் செஞ்சிருக்காரு -
பன்னென்டு மணிக்கு
தும்பு தெறிச்சு
மாட்ட உருவி விட
தேவரு தயாரானாரு
"சுத்துப்பட்டியில
பலபேரு உசிருக்கு
சங்கு ஊதின
பில்லமங்களத்து
தேவரு மாடு
வருதப்பா
தைரியமுள்ள ஆம்பள,
வீரமுள்ள இளவட்டம்
வெளையாண்டு
பாக்கலாம்"னு
மைக்குல ஒருத்தரு
அறிவிக்க
மாட்டு கயித்த தேவரு
தெறிச்சு விட்டாரு!
போதை தலைக்கேறுன
அந்தப் பொல்லாத மாடு
இவ்வளவு நாளும்
சம்மணம் போட்டு
சாப்புட்ட விசுவாசம்
கொஞ்சமும் இல்லாம
தும்பு தெறிச்சுவிட்ட
தேவரையே
அம்பு பாச்சுனமாதிரி
கொம்புல குத்தி கொன்னுபுடுச்சு
அந்த
எடத்துலயே
தேவரு கத
முடிஞ்சு போச்சு!
மனுசனுக்கு
போதை
ஏறுனா
வெலங்கா மாறுவான்
வெலங்குக்கே
போதையேறுனா
இப்படித்தானோ?
அன்னயிலருந்து....
தேவரு வீட்டுல
மாடு, காளாங்கன்னு ஈந்தா
சிங்கம்புணரி
சேவுகப்பெருமாள்
கோயிலுக்கு
நேந்து விட்டுருவாக
அத்தோட....
மஞ்சு விரட்டால
எங்க ஊருக்கு
கெடச்ச பெருமையும்
தேவரு உசுரோட
முடிஞ்சுபோச்சு
எப்படியோ....
தேவரோட ஒன்னுவிட்ட
பங்காளி கலியன்
சோழிய ஒழுங்காப் பாத்திருக்கானப்பு"
சொல்லிச் சிரிக்குது
ஊருச்சனம்!