முதலமைச்சர் அம்மாவிற்கு

முதலமைச்சர் அம்மாவிற்கு...
----------------------------------------------

முதுகெலும்புள்ள கவிஞன்
கூன் விழாத தமிழன் நான்..!
வணங்குகிறேன் முதலமைச்சரே...!

உங்கள் மீதான
குற்றப்பத்திரிக்கை ஒன்று
வாசிக்க வந்திருக்கிறேன்.
கேளுங்கள்..!


அம்மா என்று அழைக்கவைத்து
அம்மம்மா என்று அலறவிடுவது ஏனோ ?
தமிழக அரசு கொள்கையென்ன
தமிழனை மயக்கி கொள்ளையடிப்பதோ?

மதுபானக்கடை திறந்து விட்டு
குடி’மக்களின் குடி மூழ்க வைப்பீரோ?
தாலிக்கு தங்கம் கொடுத்துவிட்டு
கூலிக்கு மகளிரை விதவையாக்குவீரோ?

வாழ வைக்கும் தமிழனத்தை
மது போதையில் சாவடிப்பது ஏனோ ?
தமிழ்நாடு என்று மார்தட்டிய நாங்கள்
குடிகாரநாடு என்று மானமிழந்து போவதா ?

தமிழர்கள் எங்களை ஆள நாதியில்லை
தமிழினத்தலைவனுக்கும் ஆளஅருகதையில்லை
மறத்தமிழச்சிகளுக்கு அரசியல் தெரியவில்லை.

வேறு கதியற்று வாழவந்த மகாராணி
உங்களை அரியணை ஏற்றிவிட்டோமே - மவராசி
நீங்களோ குடிபோதையேற வைத்துவிட்டீர்களே..!
----------------------------------------------------------------------------
மன்னிக்கவும் முதல்வர் அம்மாவே..!
குற்றப்பத்திரிக்கை திரும்ப பெறுகிறேன்
குற்றம் புரிந்தது நாங்கள்தானே -எங்கள்
புறமுதுகில் முடியும்வரை குத்துங்கள்
சொரணையற்ற எங்களுக்கு வலிக்காதே.....!

ஆகவே ,

அம்மா...! ஒரே ஒரு கோரிக்கை..!
பத்து ரூபாய் அம்மா குடிநீர் புட்டியுடன்
விலையில்லா விஷமருந்து தாருங்கள்
மொத்த தமிழர்களும் செத்து தொலையட்டும்.
----------------------------------------------------------------------------

அம்மா..! அம்மா..! ஒரு சந்தேகம்...!

போரில் அப்பாவிகள் மடியத்தானே வேணும்
சொன்னது நீங்கள்தானே அம்மா அன்று .
இலங்கையினை கண்டிப்பது ஏனம்மா இன்று.
இரட்டை நிலை ஏனம்மா...? காரணம்
இரட்டை இலைக்கு வாக்குகள்தானா அம்மா..?

------------------------------------------------------------------------

முன் ஜாமீன் எப்படிங்க வாங்கணும்....?
வழக்கு எண் : 11/2014


-------------இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (11-Mar-14, 3:44 am)
பார்வை : 238

மேலே