பாரதி
கண்ணன் திருவடி எண்ணுக மனமே
திண்ணம் அழியா வண்ணந் தருமே.
தருமே நிதியும் பெருமை புகழும்
கருமா மேனிப் பெருமா னிங்கே.
இங்கே யமரர் சங்கந் தோன்றும்
மங்குந் தீமை பொங்கும் நலமே.
நலமே நாடிற் புலவீர் பாடீர்
நிலமா மகளின் தலைவன் புகழே.
புகழ்வீர் கண்ணன் தகைசே ரமரர்
தொகையோ டசுரப் பகைதீர்ப் பதையே.
தீர்ப்பான் இருளைப் பேர்ப்பான் கலியை
ஆர்ப்பா ரமரர் பார்ப்பார் தவமே.
தவறா துணர்வீர் புவியீர் மாலும்
சிவனும் வானோர் எவரும் ஒன்றே.
ஒன்றே பலவாய் நின்றோர் சக்தி
என்றுந் திகழும் குன்றா வொளியே.