+அன்பு செய்யவே முடிவெடு+

அன்பு செய்யவே முடிவெடு
உடனே அதற்காய் செயல்படு
இன்பம் பொங்கட்டும் பூமியிலே
இதற்கு நிச்சயம் உடன்படு
கோபம் முழுதாய் மறந்திடு
கொள்கை அன்பாய் கொண்டிடு
லாபம் ரசிக்கும் உலகிலே
அன்பை ரசிக்க பழகிடு
அன்பு பள்ளி பாடமல்ல
வெறுத்து அதனை ஒதுக்கிட
அன்பில் தேர்வு ஏதுமில்லை
தேவைக்கு மட்டும் காட்டிட
அன்பு மட்டும் ஜெயிக்கட்டும்
மற்ற அனைத்தும் தோற்கட்டும்
அன்பில் கிடைக்கும் வெற்றிமட்டும்
வாழ்க்கை முடிந்தும் நிலைக்கட்டும்