தொடர்கிறது என் தேடல்கள்
தேடுகின்றேன் தேடுகின்றேன்
மண்ணில் நானும் தேடுகிறேன் !
மறைந்த மனிதத்தை தேடுகிறேன்
மாசில்லா மனிதரை தேடுகிறேன் !
தேடுகின்றேன் தேடுகின்றேன்
உலகில் நானும் தேடுகிறேன் !
உண்மை உள்ளத்தை தேடுகிறேன்
ஊருக்காக வாழ்பவரை தேடுகிறேன் !
தேடுகின்றேன் தேடுகின்றேன்
பூமியில் நானும் தேடுகிறேன் !
பூரிக்கும் பூவுலகைத் தேடுகிறேன்
பூந்தளிர் மனங்களைத் தேடுகிறேன் !
தேடுகின்றேன் தேடுகின்றேன்
நாளும் பொழுதும் தேடுகிறேன் !
நா நயம் மிக்கவரைத் தேடுகிறேன்
நாணயம் உள்ளவரைத் தேடுகிறேன் !
தேடுகின்றேன் தேடுகின்றேன்
சாமானிய மனிதனாய் தேடுகிறேன் !
சாதிமதம் அற்றவரைத் தேடுகிறேன்
சாதிக்கப் பிறந்தவரைத் தேடுகிறேன் !
தேடுகின்றேன் தேடுகின்றேன்
உண்மை உள்ளமுடன் தேடுகிறேன் !
உன்னத நெஞ்சங்களைத் தேடுகிறேன்
உயரிய எண்ணமுள்ளவரை தேடுகிறேன் !
தேடுகின்றேன் தேடுகின்றேன்
நெருடும் நெஞ்சுடன் தேடுகிறேன் !
நெறித்தவறா மனிதர்களை தேடுகிறேன்
நெருடல் இல்லா மனத்தைத் தேடுகிறேன் !
தேடுகின்றேன் தேடுகின்றேன்
தரணியில் நானும் தேடுகிறேன் !
தன்மானம் உள்ளவரைத் தேடுகிறேன்
தன்னலம் இல்லாதவரை தேடுகிறேன் !
தேடுகின்றேன் தேடுகின்றேன்
பகலிரவு பாராமல் தேடுகிறேன் !
பகுத்தறியும் பண்பைத் தேடுகிறேன்
பசிதீர்த்திட பகிர்பவரைத் தேடுகிறேன் !
தேடுகின்றேன் தேடுகின்றேன்
பொறுமையுடன் நான் தேடுகிறேன் !
பொதுநல உள்ளங்களை தேடுகிறேன்
பொய்யில்லா தலைவரை தேடுகிறேன் !
தேடுகின்றேன் தேடுகின்றேன்
அல்லும் பகலும் தேடுகின்றேன் !
அன்புநிறை பூமியை தேடுகிறேன்
அறும்பிலா நிலையைத் தேடுகிறேன் !
( அறும்பு = பஞ்சம் )
தேடுகின்றேன் தேடுகின்றேன்
கனவிலும் நான் தேடுகிறேன் !
கள்ளமிலா உள்ளமதை தேடுகிறேன்
களவே நடவாத நாளை தேடுகிறேன் !
தேடுகின்றேன் தேடுகின்றேன்
துயர்மிகு நெஞ்சுடன் தேடுகிறேன் !
துன்பமே இல்லா நிலை தேடுகிறேன்
துறவறமுள்ள துறவியை தேடுகிறேன் !
தேடுகின்றேன் தேடுகின்றேன்
ஆதங்க நிலையுடன் தேடுகிறேன் !
ஆரவாரமிலா அமைதியை தேடுகிறேன்
ஆற்றல்மிகு தலைமையை தேடுகிறேன் !
தேடுகின்றேன் தேடுகின்றேன்
உறங்காமல் நானும் தேடுகிறேன் !
ஊழலற்ற அரசைத் தேடுகிறேன்
ஊருக்காக உழைப்பவனை தேடுகிறேன் !
தேடுகின்றேன் தேடுகின்றேன்
தொடர்கிறது என் தேடல்கள்....
பழனி குமார்