இந்திய சுதந்திர மாவீரர் மருதநாயகம் பாகம்-3
மருதநாயகம்!தொடர்ச்சி
தந்திரம்! வஞ்சகம்!
ஆற்காடு நவாபுக்கு அடுத்து என்ன செய்வது புரியவில்லை. பயம் வாட்டியது. சிவகங்கை சீமையின் விஷமியான தாண்டவராயன் “நீங்க ஒன்றும் பயப்படாதீங்க”என்று செயற்கையாக ஆற்காடு நவாபுக்கு தைரியமூட்டினான். இனி, மருதநாயகத்தை போரினால் வெல்ல முடியாது! இனி தந்திரம் தான் தீர்வு என்பதை உணர்ந்து செயல்பட்டான் தாண்டவராயன்! துரோகிகளை விலை பேசினான்!
இறுதியாக மதுரையில் மருதநாயகத்தின் கோட்டை முற்றுகையிடப்பட்டது. தீவிரமான முன்னேற்பாடுகளுடன், நிறைய ஆயுதங்கள், ஆயிரக்கணக்கான வீரர்கள், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவாசிய தேவைகளுடன் ஆங்கிலேயப்படைகள் திரண்டன.1763 பிப்ரவரி மாதம் மருதநாயகம் ஆங்கிலேயர்களின் கொடியை தனது பீரங்கி வாயிலில் வைத்து வெடித்து சிதற செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார். தொடங்கியது ‘மதுரை போர்’!
மதுரை போர் உக்கிரமடைந்தது! நாட்கள் பல கடந்து, வாரங்களாக நீடித்தது முற்றுகை! மருதநாயகத்தின் கோட்டை, நகரிலிருந்து துண்டிக்கப்பட்டது, உணவு,ஆயுதங்கள், மருந்துகள் என காக்கா, குருவி கூட நுழைய விடாமல் தடுக்கப்பட்டது. மருதநாயகம் சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று ஆங்கிலேயர்கள் தூது அனுப்பினர். மண்டியிட மாட்டேன் என்றார் மாவீரன் மருதநாயகம். அப்படி சிந்திப்பதே குற்றம் என கருதுபவராயிற்றே!
நாலாயிரம் வீரர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆங்கிலேய அதிரடிப்படை,இரண்டாயிரம் குதிரைகள் என மருதநாயகத்துக்கு எதிராக முற்றுகை வலுத்தது. மருதநாயகத்தின் படையினர் பீரங்கிகளால் அதிர வைத்தனர். பின்வாங்கி ஓடிய ஆங்கிலேயர்கள் மதுரை தெப்பக்குளத்துக்கு அருகே பதுங்கினர். ஆங்கிலேயர்கள் அணியில் இருந்த இந்தியப்படையினர் போரில் ஈடுபடுவது குறித்து குழம்பிக் கொட்டிருந்தனர்.
அச்சமயத்தில், இந்திய வீரர்களின் குழப்பத்தை பயன்படுத்தி மருதநாயகம் நடத்திய தாக்குதலில் படு தோல்வியடைந்தது ஆங்கிலேயப்படை. வைகை நதி சிவந்தது! போர் தற்காலிகமாக நின்றது.
போரில் உறுதி
கோட்டையில் மருதநாயத்துக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகளும் தளபதிகளும் உறுதியோடு நின்றார்கள். அவர்களில் ஒருவர் மார்ச்சந்! அவருக்கும் மருதநாயகத்திற்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது. எனினும் அவரே சிறந்த தளபதி என்பதை உணர்ந்த மருதநாயகம் அவருக்கு முன்னுரிமை கொடுத்தார்.
ஒருவாரம் கழித்து 15.09.1763ல் மீண்டும் போரை தொடங்கினர் ஆங்கிலேயர். அப்போதும் தோல்வி. ஆங்கிலேயர்களின் தோல்வியில் கிடைத்த அமைதியில்,தற்காலிக இடைவெளியை சரியாக பயன்படுத்தினார் மருதநாயகம்! கோட்டைக்குள் உணவு, ஆயுதங்கள், மருந்துகள் கொண்டு வரப்பட்டு அடுத்த போருக்கு தயாரானார்கள்.
மருதநாயகம் தொடரும்...........