ஓடுதல் நிறுத்த கூடுது நலம்

“நான்” “எனது” “என்னுடைய” -
உயிரோடிருக்கும்
ஒவ்வொருவரையும்
உந்தித்தள்ளும்
உணர்வுகள் இவையே.

உடலும் மனமும்
கூட்டணி சேர
“நான்” எனும் உணர்வு கூடுது.
எண்ணமும் வினையும்
பின்னணி சேர
வாழ்வே பின்னலாய் ஆகுது.

எல்லாம் வேறாயிருந்தும்
எவரிலும் ஒன்றாயிருப்பது
“நான்” எனும் உணர்வே!
இவ்வுணர்வே விரிவாகி
“எனது” “என்னுடைய”
என்றுமாகிறதே!

கூட்டணி விளைவாய்
தோன்றுமிவ் வுணர்வுகள்
கூட்டுது வாழ்வில் வண்ணம்.
விருப்பும் வெறுப்பும்
எண்ணமும் வினையுமாய்
வெளிவருவது திண்ணம்.

அறியும் பொருள் எதுவாகினும்
அதுவும் நாமும் ஒன்றே.
அடிப்படையில்
அனைத்தும் ஆக்கிய
அணுக்குவியல் ஒன்றே.

அணுக்கள் சேர்ந்த விதத்தில்தானே
அனைத்தும் வேறாய்த் தெரியுது.
ஈர்ப்பதையடையவும்
வெறுப்பதை விலக்கவும்
எல்லார் வாழ்வும் தேயுது

இருப்பின் இருத்தலை
உணர்த்திடும் உணர்வே
இரண்டாய்ப் பிளக்குது ஒன்றை.
தனக்கு மிஞ்சியே
மற்றவர்க்கென்று
மனிதர்கள் வாழ்வது நன்றோ?

“நான்” எனும் உணர்வே
நம்மைப் பிரிக்க
நசித்துப் போனது படைப்பு.
இப்படி யாவரும் எண்ணுவதாலே
எத்தனையெத்தனை கசப்பு?

எல்லோர் வாழ்வும் ஓடுகளமாக
ஓடிக்கொண்டேயிருக்கிறோம்
ஓடுவதெதற்கு? –
ஒருவர்க்கும் தெளிவில்லை
ஓடுதல் நிற்பதுமில்லை.

ஓடிச் சேர்க்கும் பொருளெதுவாயினும்
ஒருநாள் அழிவது உறுதி.
எத்தனை சேர்த்தால் போதுமென்று
எவரும் அறியாத(து) விதி.

தேடியே தொலையுது அமைதி.
ஓடியே தீருது வாழ்வு.
கண்ணை விற்றுச்
சித்திரம் வாங்குதல்
புத்தியுளோர் செய்யத் தகுமோ?

ஓடுதல் நிறுத்தி ஒருகணமேனும்
உண்மையை உணர்வோமாயின்
எஞ்சும் வாழ்வில்
மிஞ்சிடும் களிப்பும்
அமைதியும் அன்பும் நலமும்.

வாழ்க நலமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க எவ்வுயிரும்
வாழ்க வையகம்.

எழுதியவர் : இல. சுவாமி நாதன் (10-May-14, 9:44 am)
பார்வை : 80

மேலே