பள்ளசாலை பல்லாக்கு ஏன்
சின்னச் சின்ன பூகுழியாம்
சிந்திக் கிடக்குது நகர்முழுதும்
வண்ண வண்ண வண்டியேறி
வந்து விழுவோர் கோடிக்கோடி!!
இழந்தவர் மிச்சத்தில்-அதில்
எழுந்தவர் லட்சத்தில்
லட்சியமற்ற அரசாலே
அலட்சியமான மனித உயிர்
என்னவென்று சொல்வேனம்மா...!!
வஞ்சிக்கப்பட்ட மக்களா நாம்
கெஞ்சிக் கெஞ்சி...
வாங்கிச் செல்வார் வாக்கினை
கஞ்சிக்கு வழியற்று கலங்கி நிற்க !
கேள்வி கேட்டால் காட்டிடுவார்
அவர் தம் செல்வாக்கினை !!
அஞ்சி அஞ்சி வாழுதிந்த மானிடம்!
அஞ்சவில்லை அவர்கள் எமனிடம் !!
மாறி மாறி அடிக்கிறார்கள் கொள்ளை
மாரி வந்தால் மரணம் சம்பவிக்கும் எம்மை
மனம் மாறிடாத தலைகளாலே...!
மரித்தவர் குடும்பம் குலைந்து போகும்
மற்றவர் மனங்கள் தினம் நொந்து போகும்!!
மாறிடாத சாலையென்னி வெந்து போகும்
அமைத்திடாத சாலைக்கு
ஆறுமுறை ஒப்பந்தமாம்
அள்ளிச் செல்வார் கொள்ளை காசை
யாவரும் அறிந்த வெள்ளை...!
யார் தடுப்பார் ?
யாவருமே பிரித்தெடுப்பார்
யார் பணத்தை யார் பிரிக்க... !!
யார் கேட்பார்?தைரியத்தை தந்ததாரோ?
அச்சு காகிதத்தை அள்ளித் தந்து
பிச்சை கேட்டவர் அன்று !!
அச்சடிச்ச நோட்டையெல்லாம்
சுருட்டிச் செல்வார் இன்று !!
பற்றுதலால் வாக்களித்த தோழனும்
பள்ளத்தில் விழுந்து மரிப்பார்
அதைமறந்து பல்லாக்கு தூக்கி
வாழ்த்துகிறான் பாரும்...!
ஈடாய் உயிரை வைத்து
நஷ்டஈடாய் சொற்ப பணம் தந்தாலும்
மரித்த உயிர் மீண்டுடுமா?
கட்சி எனப் பாராமல்
புரட்சி செய்ய வேண்டாமா ?
மறுமலர்ச்சி கண்டிட
வருமுன் காத்திட வேண்டாமோ!
என்றோ ஒருநாள் வருமென்று
நம்பி நம்பி இன்றை இழப்பதேன்?
வரும் போதே போகும் நாள்
இறைவன் தந்த தீர்மானம் !
அச்சம் விட்டு வெளியேறு!
ஆட்சிக்கெதிராய் போராடு !
மாற்றும் சக்தி நம் கையில்
மன்றாடிக் கிடப்பது வீண் !
மழையும் காற்றும்
அலையும் புயலும்
சுயம்பாய் சுயமாய்
உனக்கு நீயே ஆணையிடு
உணர்வாயோ மனமே !