நெஞ்சில் நிலைப்பவர்கள்
அன்று நமைபெற்றோர் அன்பாய் வளர்த்தெடுத்த
நன்றிக் கடனடைக்கும் நன்னோக்கில் இன்று
முதியோர் மனைசேர்க்கும் முனைப்பு உனக்கும்
கதியாக காத்துக் கிடப்பு.
வயதான காலம் வலுவற்று போயே
அயலாரை நாடும் முதியோர் நயமாய்
கவனிக்கப் பட்டால் காலங்கள் தாண்டி
அவனி கவனிக்கும் உனை.
உன்பிள்ளை நீவளர்க்கும் உன்னதங்கள் போலன்று
தன்பிள்ளை தான்வளர்த்த தந்தைதாய் என்றேதான்
கொஞ்சம் நினைக்கும் குடும்பத்தில் மூத்தோரை
நெஞ்சத்தில் வைப்பார் நிலைத்து!