காதலே போ போ

ஒத்துக் கொள்ளத் துணிவு வரும் வரை
உண்மையைக் கொஞசம் மூடி மறைப்போம் !
காதல் என்பது இயற்கையின் உபாதை
காமன் வந்து நுழையும் பாதை !!
கொள்கையும் குணமும் ஒன்றாய்ப் பொருந்திக்
கூடி வாழும் காதலர் ஒரு சிலர்.
அப்படி நடப்பது அற்புதமானது
ஆனந்தத்தின் ஆலயமாவது.
சிந்திக்கத் தெரிந்த காதலர் என்றால்
சினிமாச் சாயம் ஏறாது.
சில்லறைக்காகச் சிரித்துப் பேசும்
சின்னத்தனமும் இருக்காது.
பசப்பு வார்த்தை பேசிப் பிணைந்தபின்
பயந்து நழுவப் பார்க்காது
பணத்திற்காகப் பாதை மாறும்
பாதகச் செயலும் நடக்காது.
கணிணித் திரையில் மலரும் காதல்
காலம் முழுதும் மணக்காது
கடற்கரை மறைவில் வளரும் காதல்
கழுத்தில் நாணாய் ஏறாது.
வயதை மீறி வருகிற காதல்
வாழ்க்கை நடத்த உதவாது.
வானில் தெரியும் நிலவைப் பார்த்து
வயிற்றை நிரப்ப முடியாது.
காதலை நம்பி வாழ்க்கையைத் தொலைத்துக்
கணக்கை முடித்தவர் எத்தனை பேர்?
காதல் தீயின் வெப்பம் பட்டுக்
கருகித் தீய்ந்தவர் எத்தனை பேர் ?
காதலன் எவனும் கட்டியதல்ல
கனவுச் சின்னம் தாஜ்மகால் !
கட்டிய கணவன் காதலைச் சொல்லக்
கல்லில் எழுதிய கவிதையது !!
தொட்டால் மலர்ந்து,விட்டால் மறையும்
தொடுதிரைக் காதல் பாழாகும்
துயர் வரும்போதும் துணையாய் நிற்கும்
தூய காதல் வாழ்வாகும்.