தீராத போர் - போராகும் பார்
விழித்திடும் இமைகளே
நீ விழிப்பதென்றால்
பூமியில்
புலரும் பொழுதில் விழி
அல்லது
மலரும் மலரில் விழி
யுத்தப் புரை பூண்டு
இரத்தக் கறை நக்கும்
நாய்களில் ஏன் விழிக்க வைக்கிறாய் ?
மகத்தான கண்கள் இரண்டால்
வபாத்தாகும் உயிர்களை
சதா காலம் எப்படி பார்க்க ?
*அளுத்கம விவகாரம்
*பாலஸ்தீனிய நாசகாரம்
*பாரெங்கும் சா கரம்
இதைப் பார்க்கவா
விழிக்கிறாய் ??
பட்டினியில் விழுந்து
கண்ணீரைத் தண்ணீராய்ப் பருகும்
புண்ணிய ஜீவன்களின்
அழு குரலோசைக்கு
உன் விழிப்பு எதற்கு ??
விழிப்புகளே விளியுங்கள்
உன்னத கண்களை திறந்து
புண்ணிய பூமியின் மீது
ஒற்றுமை ஓசையின் வாயில்கள்
திறக்கும் தருணம் ஒன்றிற்காய்
விழியுங்கள் ...
இரும்புக் கோட்டைகள்
உடைக்கப் பட்டு
உள்ளே இருக்கும் சமாதான
சாமரங்கள் பாரினில் வீசி - தரணி
பூரிக்க விழியுங்கள் .