என்ன சொல்லி விழுகின்றன மழைத்துளிகள்

"இவன் வந்தால் சகதி, வராவிட்டால் அவதி"
என்று நாங்கள் சொல்லியதால்
கோபமா உனக்கு?

ஆயிரம் கரம் கொண்ட
சூரியனை காண்கின்றோம்
அனுதினமும்...
ஆயிரம் நீர்ச் சரம் கொண்ட நீ,
ஆடிகொருமுறை
ஏன் வருகிறாய்
எனத் தெரியாமல் கேட்டுவிட்டோம்!

மண்ணிடமிருந்து
வாசத்தை பிரித்துத் தரும்
அன்னபட்சி நான்! என
மார்தட்டிக் கொள்ள
வந்திருக்கலாம் நீ?

வசதி படைத்த மாந்தர்தம்
நலன் வினவ வந்த நீ,
அவர் மறுக்க,
அவர்களின் மகிழ்வுந்துகளின்
கண்ணாடிகளில்
பட்டுத் தெறித்த
கோபமா உனக்கு?

ஏழைக் குடிசைகளில்
அனுமதி என்றும் உனக்குண்டு
என்பதறிந்து,
கூரை வழியே புகுந்து
அவர்கட்கு
என்ன சொல்ல வந்தாய் நீ?

இன்னல்கள்...மின்னல்கள் போல!
அரை நொடி வாழ்க்கைதான் அவ்விரண்டுக்குமே!
என அக்குடிசைவாழ் மக்களுக்கு
உணர்த்த வந்தாயா என்ன நீ?

குடிசைகளுக்கு அருகில்
ஒரு சுவர் வேலி,
நீ வந்த அர்த்த வேளையில்
நீ செய்தஅற்புத வேலையில்,
அந்த உறுதி மறந்த வேலி,
பல ஜீவன்களின் உயிரை
ஒட்டுமொத்தமாக .
அன்று மேய்ந்தது!

கீழே விழும்
உன் ஒவ்வொரு துளியிலும்
இரக்கம் தேடும்
எம் குல மாந்தர்க்கு
இறக்க நேரிடும்
விபத்துக்களை
ஏன் அளிக்கிறாய் நீ?

பசி வந்து,
பத்தும் பறந்த,
பகட்டில்லா,
பதினோரு உயிர்களை குடித்து
பசி தீர்த்து கொண்டாய் நீ!

சொல் மழையே, மழையின் துளியே!
வெள்ளை ரத்தமான நீ,
சிகப்பு ரத்தம் பார்க்க
ஆசைப்பட்டு கீழே வருகிறாயா?

அல்லது எம்மவரின்
பொறியியல் திறனை சோதிக்க
இப்படியொரு பரீட்சையா?

பின்குறிப்பு:
சமீபத்தில், மழையின் பாதிப்பால், சென்னை, உத்தரபாளயத்தில், சுவர் ஒன்று சரிந்து, அதில் எதிர்பாராதவிதமாக் உயிர் நீத்த, 11 கட்டிட தொழிலாளிகளுக்கு இக்கவிதை சமர்ப்பணம்!

- அக்னிபுத்ரன்!

எழுதியவர் : அக்னிபுத்ரன் (11-Jul-14, 11:57 pm)
பார்வை : 94

மேலே