பரலோகத்தில் இருக்கும்
மனிதர்கள் எனக்கு சம்மதம்
மதங்கள் அல்ல...
இறைவன் எனக்கு சம்மதம்
இடைத்தரகர்கள் அல்ல ...
வாழும் வழி
இறக்காதிருத்தல் !!
மதத்தின் பணி இதை
மறக்காதிருத்தல் !!
நாம்
மரணித்து மட்டுமே
மதங்கள் ஜெயிக்கும் என்றால்
கொலைகளால் மட்டுமே
கொள்கைகள் வாழுமென்றால்
வாருங்கள் கொல்வோம்!!
இம்மையில் நரகம்,
மறுமையில் சொர்க்கம் ,
மனிதரில் பேதங்கள்.....
கட்டிடம் காப்பதற்காய்
கட்டியங் கட்டியதால்
நிறைந்தன புதைகுழிகள் ..
கல்லறை காடானது பூமி !!!
வாருங்கள் இன்னும் கொல்வோம் !!!
கோயிலாம்,பள்ளியாம்,
தேவாலயம்,விகார்களாம்....
மனிதமே இறந்தபின்
மண்ணில் இவை எதற்கு?...
பிறப்பினால் அல்ல,
வளர்ப்பினால் பிரிகின்றோம்!!
இறப்பினில் மட்டும்
இணைகின்றோம் மறுபடியும்...
இடைப்பட்ட வாழ்க்கைக்கா
இத்தனை போராட்டம்??
உடைபட்டு,உதைபட்டு
காக்கும் கடவுளையே
காக்கத் துடிக்கும்
மடையர்களை மன்னியும்!
பரலோகத்தில் இருக்கும்
எமது பரம பிதாவே!!!....