நிழல் அறியாத நீ
என் நிழல் அறியா
உன் நேசத்தில்
சுகமாய்ப் பிரசவித்த
என் இனிய நாள் இறவாது
தொடர்ந்திட அடுத்தடுத்த
நாட்கள் தன்னைத்தானே
கருவறுத்துக் கொள்கின்றனவோ
மறுநாளின் மலர்ச்சியில்!
காரணமில்லா அழுகையின்
ஓசையில் வெடித்துச் சிதறும்
நிசப்தத்திலும் நானறியாமல்
இதயம் சில்லிடும்
இனம் புரியா மகிழ்ச்சியிலும்
வண்ணமிடும் எண்ணங்கள்
எங்கிருந்தோ நீ
எனக்காகத் துடிப்பதாய்!
மறந்தும் உன்னை
மறவாமலிருக்க நினைவுச்
சேலையில் உன் ஞாபகமாய்
முடிச்சிட்டுக் கொள்கிறேன் !
எனைத் தேடிக்கொண்டு
நீ வருவாய் எனில் என்னிருப்பிடமாய்
உன் இதயக்கூட்டின் முகவரி
உரைப்பேன் உயிரின் வாய்மொழியென
உன் செவிதனில்!!