தொலைந்து போனவள்

அன்றாட நிகழ்வுகளையும்
அடுக்கிவைத்த ஆசைகளையும்
கவனமாய் சேமித்து கொள்கிறாய்..
வாழ்க்கை துணையுடன்
வார்த்தை மாற்றிக்கொள்ள..!

தடைகளற்ற நம் பேச்சில்
தணிக்கைகள் இடம்பெற துவங்குகின்றன

வாசலோடு நான் விடைபெறவேண்டிய கணங்கள்
வருங்காலத்தில் வர காத்திருக்கின்றன

திருமணம் நோக்கி பயணப்படுகிறாய்..நீ !
தனிமை தீவினை நோக்கி பயணப்படுகிறேன் ..நான் !

இனி
யார் அர்த்தம் தருவார்
என் மௌனங்களுக்கு ..?

இனி
யார் விளையாட வருவார்
என் பகிர்வுகளுக்கு..?

இனி
யார் செவி சாய்ப்பார்
என் ரகசியங்களுக்கு..?

இப்போதெல்லாம்
கேட்கபடாமலே கிடைத்துவிடுகின்றன
என் கேள்விகளுக்கான பதில்கள்
"தாங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர்
மற்றொருவருடன் பேசி கொண்டிருக்கிறார்"
என்ற செய்தியுடன்.

மணமுடித்தபின்
உன் விழிபார்த்து பேசிட
சிறிதும் விருப்பமில்லை..
யார் கண்டது..!!
வலிகள் இடம்பெயர்ந்துவிடலாம்
என்ற பயம்தான் எனக்கு..

காலத்தின் கட்டளைப்படி
உன்னையும் இணைத்து விடுகிறேன்
என் வாழ்வின்
தொலைந்து போனவர்களின்
பட்டியலில்..!!

அடுத்த பிறவி என்று,
ஒன்றிருப்பின்
அயல்நாட்டில் பிறந்துவிடலாம் நாம்,
குறைந்தபட்சம்
ஆயுள்வரையேனும் நீளும் நம்நட்பு..!

எழுதியவர் : கல்கிஷ் (24-Sep-14, 7:37 pm)
Tanglish : tholainthu ponaval
பார்வை : 119

மேலே