சிரிக்கும் தாரகைகள்------அஹமது அலி-----

வானத்து தாரகைகள்
யார் விதைத்த பூ விதைகள்
தூரத்து தேவதைகள்
துயிலாதோ துளிர் மலர்கள்!

*****
பகலவனும்
பால் நிலவனும்
வண்ணமொளிர்ந்து
வானமதில் தவழ்ந்தாலும்

*****
கண் சிமிட்டும்
தாரகைகள் இல்லா வானம்
பசுமையில்லா
பாலைவனம்!

*****
இராப் பொழுது
வான் தாமரை
மலர்ந்த போது
சிந்திய மகரந்தமோ
சிரிக்கும் தாரகைகள்!

*****
எண்ணிய
எண்ணங்கள் யாவும்
ஏணியில் ஏறி
எண்ண முடியா
எண்ணிக்கையில்
மின்னுவதும் தாரகையோ.!

*****
மின்மினிகள் தேசத்தில்
மன்மதன்கள்
பறிக்க முடியா வண்ணம்
சுடும் பூக்கள்
தாரகைகள்!

******
பெண்மணியின்
கண்மணிக்கு
விண்மணிகள்
என்ன உறவு?

******
பிறை வானமும்
குறை வானமே
தாரகைகள் இல்லா
வானத்தில்!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (25-Sep-14, 8:10 am)
பார்வை : 200

மேலே