கனவுகள் மெய்ப்பட வேண்டும்
கனா கண்டேன் ஒரு நாள்
காந்தி வந்த திருநாள்...
என்ன நினைக்கிறீர் நம் தேசத்தை
இப்போ தெனக் கேட்டேன்.
மனதிலே வஞ்சம்.
தேசத்தில் பஞ்சம்.
அடிப்படைக்கு கஞ்சம்.
எளியோர்க்கில்லை தஞ்சம்.
வாய்மையோ கொஞ்சம்.
பதைக்கிறதென் நெஞ்சம்.
ஊழலோ இமயத்தையும் விஞ்சும்.
ஏழைகளுக் கில்லை கஞ்சும்.
இனிபிறக்கும் எந்த பிஞ்சும்
கடனால் பிறரைக் கெஞ்சும்.
உதிர்த்தார் வார்த்தை அவரே...
நானோ விழித்திருந்தேன்
நிஜத்தில் அல்ல...
தூக்கத்தில் – அத்துடன்
துக்கத்தில்.
இந்நிலை மாற
என் செய்ய வேண்டும் ?
வினவினேன் நானே...
வந்தது பதிலே...
அறியாமை இருள் அகன்றிட வேண்டும்.
அன்பு விதை விதைத்திட வேண்டும்.
அகிம்சை தரு வளர்ந்திட வேண்டும்.
ஆளுவோர் ஆடம்பரம் தவிர்த்திட வேண்டும்.
உழைப்பால் உயர்வு அடைந்திட வேண்டும்.
ஊரில் ஒற்றுமை ஓங்கிட வேண்டும்.
ஊழல் புரிவோரை ஒழித்திட வேண்டும்.
ஏழைகள் வாழ்வு எழில் பெற வேண்டும்.
ஏந்துவோர்இல்லா நிலை வர வேண்டும்.
பதவி ஆசையை துறந்திட வேண்டும்.
பொதுநலம் கொண்டே வாழ்ந்திட வேண்டும்.
நீதியின் சூரியன் உதித்திட வேண்டும்.
நேர்மையை நிலை நாட்டிட வேண்டும்.
கட்டாயக்கல்வி கடைபிடிக்க வேண்டும்.
கறைபடியா கைகள் பெற்றிட வேண்டும்.
கைத்தொழில் பலவும் கற்றிட வேண்டும்.
கலங்கரை விளக்கமாய் ஒளிர்ந்திட வேண்டும்.
பழமையில் புதுமை புகுத்திட வேண்டும்.
பெண்கள் சமநிலை அடைந்திட வேண்டும்.
பெற்றோரை என்றும் காத்திட வேண்டும்.
பெரியோரை நாமும் மதித்திட வேண்டும்.
சாதி உடையினைக் களைந்திட வேண்டும்.
சமத்துவ ஆடையை அணிந்திட வேண்டும்.
சண்டைகள் இல்லா எல்லை வேண்டும்.
சமாதானக்கொடி என்றும் பறந்திட வேண்டும்.
மதுஇல்லா நாடு மலர்ந்திட வேண்டும்.
மற்றோர் போற்ற வாழ்ந்திட வேண்டும்.
வல்லரசு கனி பெற்றிட வேண்டும்.
வன்முறையை வேரோடு அகற்றிட வேண்டும்.
ஞாலம் நம்மை பேசிட வேண்டும்.
நாடி நம்மிடம் வந்திட வேண்டும்.
விழித்தேன்.
மறைந்தார் அவர்.
நினைவுகள் அல்ல இக்கனா -
ஆகிட கூடாதொரு வினா ?
சேர்ந்திடுவோம் !!!
செயல்படுத்திடுவோம் !!!
வல்லரசாகிடுவோம் !!!
வெற்றி நமதே !!!