தலைக்கனம்

உங்களைவிட
சற்றும் மாற்றுக்குறையாத
எனக்கு
நீங்கள் எவரும்
சிம்மாசனமளிக்கத் தேவையில்லை
எனக்கானயிடத்தில்
வேறெவரும்
அமர முடியாது ,
உங்களின்
கௌரவ மேடைகளில்
எனக்கு
முதலிடமும் வேண்டாம்
மூன்றாமிடமும் வேண்டாம்
எனதுயிடம்
உங்களில் எவரும்
அமர முடியாத
உயரங்களின் அகங்காரமற்ற
அதியுன்னத உயரம் -
எனையன்றி
அதைஎவரும்
எட்டிப் பிடித்தல் என்பது
இயலாத காரியம் !
உங்களின் பாசாங்கும்
தயக்கமும்
முகஸ்துதியுடனும் கூடிய
ஸ்துதியர்ச்சனை யெதுவுமெனக்குத்
தேவையில்லை !
வாசிப்பதில்லையெனவும்
வாசிக்கமுடிவதில்லையெனவும்
முடிவெடுத்தபின்
கொடுக்கல் வாங்கலுடன்
கூடிய
எடைபோடுமுங்களின்
சராசரித் தராசில்
என் சிந்தனையையும்
சிரத்தையையும்
கற்பனைகளையும்
எடை போடாதீர்கள் -
ஏனெனில்
எனது கவிதைகளின்
கிளைகளில்
உங்களில் எவராலும்
கூடு கட்டயியலாது !
தலைக்கனமற்ற
கனமுள்ள
எனது கவிதைகளை
ஒரு மில்லிமைக்ரான்
கூட
உங்களில் எவராலும்
நகர்த்த முடியாது
ஏனெனில் -
உங்களிலெவரின் வாழ்க்கைக்குள்ளும்
வார்த்தைகளுக்குள்ளும்
வசப்படாதது
எனது கவிதை .