அலங்காரத்தில் அவைகள்

தோழி மகனின்
திருமண வரவேற்பு விழா
கொரிய மணப்பெண்
தமிழ் மாப்பிள்ளை
சாதி, மதம் இனம் கடந்ததாய்...
காதல் மணத்தில் கைகோர்ப்புகள்...

நட்சத்திர ஓட்டலில்
நுழையும் முன்
திக்குகுக்காடிப் போனேன்...
எத்திசையில் எந்த விழா??

விழா செய்தியும்
விழா நாயக நாயகியின்
விவரங்களை சுட்டிக்காட்டி
நட்டுவைத்த அம்புக்குறி அடையாளம்
வழி காட்டியபடி.....

மண்டபத்தினுள் நுழைகையில்
நாசி தொட்ட நறுமணம்
குளிர்ச்சியை குழைத்துக் கொண்டு...

அறிந்த முகங்கள்
அத்தனை பேர்களின்
புன்னகைகளை வாங்கி
திரும்ப செலுத்தியபடி
முன்னேறியதில்...

சந்தனமும் வெண்ணையும்
கலந்த நிறத்தினளாய் மணமகள்
கார்மேக நிறத்தில்
கருணையே வடிவாய் மணமகன்
இன்முக தலையசைப்புடன்
காதல் நிறமேதும் பார்ப்பதல்ல
என்பதின் நிரூபணமாய்....

மணமக்களுக்கு வாழ்த்து கூறி
கைகுலுக்கியபோது
அயல்நாட்டு மருமகளிடம்
அறிமுகப் படுத்தப்பட்டேன்
"ஷீ ஈஸ் எ போயட்"
சங்கடத்துடன் நெளிந்தேன் நான்

"நைஸ் டு மீட்டிங் யூ"
புன்னகை சொரிந்த முகத்தோடு
பளீரிட்ட மணமகளின் வார்த்தைகள்

மங்கிய ஒளி வெளிச்சத்தில்
அந்த மண்டபம்
மகிழ்ச்சிகளின் பிரகாசத்துடன்...

சுற்றிலும் நோக்கினேன்
ஜடப் பொருள்கள் யாவும்
ஆடைகள் தரித்தபடி
வியந்த பார்வைகளில்....

நாற்காலிகளுக்கு
கால்களே தெரியவில்லை
தழைய தழை ஆடைகள்
விலை உயர்ந்த ரகத்தில்..

கதவுகளுக்கோ
இரண்டுவிதமான அடுக்காடைகள்
மேல் சட்டையும்
கால் சட்டையுமாய்
திரைச் சீலைகள்....

ஆங்காங்கே மேசைகளில்...
அமரும் இருக்கைகளில்
நுழை வாயில்களில் என
அழகழகான ஆடைகளுடன்...

"அக்கா ஏதாவது
பழைய புடவை இருந்தா குடுங்க... "
என்றோ ஒருத்தி
கந்தலாடையுடன்
புடவை கேட்டு நின்றது

பள்ளி மாணவனின்
சீருடை பின்புற கிழிசல்...

இன்னும் பல
கந்தலாடை கோலங்கள்
கண்ணெதிரே காட்சிகளாய்
வந்து போக....

அங்கிருந்த எந்த காட்சியும்
ரசிக்கவில்லை...
வித வித உணவும்
ருசிக்கவில்லை..

விழாவிற்கு வருகை தந்தபோது
இருந்த மகிழ்ச்சி
திரும்புகையில்
தொலைந்துதான் போனது... 

எழுதியவர் : சொ.சாந்தி (30-Nov-14, 8:21 pm)
பார்வை : 195

மேலே