தீராத உன் நினைவு - ப்ரியன்

(சந்திப்பு : ஐந்தாம் சந்திப்பு)

உன்னையும்
சந்தித்துவிடலாமென்று
எண்ணிக்கொண்டே
சென்னையிலிருந்து
புறப்பட்டேன் நான்;
என்மன ஓட்டத்திற்கு
ஈடுகொடுக்க இயலாத
மகிழுந்தில் !!!

நீ இங்கு இல்லாது போனதால்
சந்தோஷம் பரிமாறிக்கொள்ள
உந்தன் பார்வையோ
வார்த்தைகளோ
கிடைக்கவில்லை எனக்கு;
இருந்தும் உன் நினைவுகள்
அந்த குறைகளை
நிரப்பிவிடுகின்றது !!!

போகி பண்டிகைக்கு நீ
உரலில் மாவிடித்து படைத்து
உறவினர்களுக்கு பகிர்வாய்
என்னைத் தவிர;
எப்படியோ சுற்றி
என் வாய்க்குக்கிட்டிய பிறகே
நீ பகிர்ந்ததும் எனக்குதான்
என்பதை உணர்வேன் !!!

சூரியனுக்கு பொங்கல் வைத்து
கும்பிட்டு வீடு திரும்பும்போது நீ
பாவாடை தாவணியில்
ஓரக்கண் பார்வை ஒன்றை
வீசிச்செல்வாய் வழக்கம் போல;
நீயும் என்னை காதலிப்பதாய்
நினைத்தே நான்
வாழ்ந்து கடந்துவிடுவேன்
அந்த ஆண்டையும் !!!

மாட்டுக்கு பொங்கல் வைத்து
மகிழ்ச்சியாய் கூவி
ஆட்டம் அலபரைகளை நான்
உன் கண்ணில்பட
அரங்கேற்றுவேன் சிறுவனாகி;
குமரி நீ சிறுமியாகி
குலுங்கி சிரிப்பதை
நான் பார்த்திடத்தானே !!!

காணும் பொங்கல் அன்று
பால்பொங்கியதா என
முதன் முதலில் வினவி
பொங்கல் பணம் பெறவது
போட்டியாயிருக்கும் இங்கு;
நமக்கிடையே மட்டும்
பேசிடகிடைத்த வாய்ப்புக்கு
யார் முதலிலென போட்டி !!!

பொங்கல் விளையாட்டு போட்டி
தொடங்கி தொடர்ந்ததை நடத்த
பாராட்டுவார்கள் பலர்
பொய்கையூரில் என்னையும்;
போட்டி நடுவரான நான்
உரக்க ஊரறிய பேர்சொல்லி
உன்னை அழைத்து பார்த்திடத்தான்
இதெல்லாம் என்பதை
நீ மட்டும்தான் அறிவாய் !!!

கோகோ மாகோல போட்டியில்
பங்கேற்க
உன் பெயர் கொடுத்திடத்தான்
நடுவர் என்முன் நிற்பாய் நீ;
எனக்கோ
மணக்கோலத்தில் நிற்பதாய்
கண்முன் தோன்றும் !!!

நான் விரும்பி விளையாடும்
கபடி போட்டியில்
காயமுற்று தோல்வி பெற்றாலும்
கலங்குவதில்லை;
எனக்கு என்னவாயிற்று
என்று நீ யாரிடமேனும்
விசாரிக்கும் ஒரு வார்த்தை போதும்
பொங்கல் பரிசாய் எனக்கு !!!


படம் : நன்றி_ விமல்சந்ரன்.

எழுதியவர் : ப்ரியன் (17-Jan-15, 10:41 am)
பார்வை : 248

மேலே