நம்பமுடியாதொரு ரணம்
மாடுகளுடன்
வீடடையும்
மேய்ச்சல்காரன்.
ஒரு டீ போடும்யா
என்ற குரலுடன்
உள் நுழையும்
மரப்பெஞ்சு தேநீர்கடை.
ஏலா என்னா
இம்புட்டு நேரம்
என்றபடி கடக்கும்
மீசக்கார தாத்தா.
இன்று எப்படியும்
சுவாரசியமாகும்
ஓடிப்போன செல்லதாயி
மகளின் கதையோடு
தூசி தட்டப்படும்
திண்னை.
குலை குலையா
முந்திரிக்காயோடு
குழந்தைகள் சுத்தும்
சத்தம்.
இவற்றில்
ஒன்றேனும்
இல்லாமல்
கண்ணாடியில்
அடைப்பட்ட
இந்நிறுவன
சிற்றுண்டிச்சாலையின்
தயார்நிலை
எந்திரத் தேநீரின்
சுவையோடு
என்னால்
நம்பமுடியவில்லை
இது சாயங்காலமென்று.
--கனா காண்பவன்