உறக்க ஏழை

.....ஒரு நமட்டுச் சிரிப்புக்காரன்.....
தூங்கும் நேரத்தை
தூக்கிலிட்டு
விழித்திருக்கும்
நேரங்களை
எண்ணி எண்ணி
வயதென்பது
வரையறுக்கப்பட்டால்
இவன் வயது
பல கழுதைகளை
தாண்டியது.
பலர் சாவுக்கு
ஒத்திகை பார்க்கயில்
விழி மூடாதிருக்கும்-சில
வாழ்வு வெறியர்களில்
இவனொருவன்.
உறக்க ஏழை
இவன்
இரவிடம்
யாசிப்பவன்.
அது தந்துவிடும்
வாடையாவது-சில
வரிகளையாவது.
உணர்வருந்தும்
உன்னத வேளைகளில்
உணவருந்த
மறந்துவிடுவதுண்டு.
ஆண்கள் நிரம்பிய
அறைதனில்
பெண்ணை வர்ணிக்க
நிர்பந்திக்கப்படுகயில்
இவன் நமட்டுச்
சிரிப்புக்காரன்.
அவனை கவர்ந்த
அவளை கவர
அவன் வேண்டலில்
இவன் பேனா
உதிர்க்கும் -ஓரிரு
துளிகளால்
தமிழ்காதல் சொல்லும்
'இவன் உண்மை தோழன்.'
கூட்ட நெரிசலிலும்
சில சமயம் இவனிதயம்
பூங்காவில் வசிக்கக்கூடிய
சிறுவெளியின்
பெருமாயக்காரன்.
ஒருத்தியின்
ஏற்புக்கு பின்
அவளை எழுதி எழுதியே
அழகெல்லாம்
காதலென்றவன்.
அதே ஒருத்தியின்
மறுப்புக்கு பின்
காதலை எழுதி எழுதியே
காதலிக்க நேரமில்லை
என்பவன்.
பசித்திருக்கையில்
இவனுக்கோர் அழைப்புவரும்
கல்யாண சமையல் பற்றி
ஒரு பா எழுத.
கவிஞன் என்ற
பொதுப்பெயரோடு
கையூன்றி எழுவான்.
--கனா காண்பவன்