புத்தகப் பூக்கள் =0= குமரேசன் கிருஷ்ணன் =0=

( புத்தகப் பூக்கள் என்ற தலைப்பு தந்த அகன் அய்யா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளும் , சிரம் தாழ்ந்த வணக்கங்களும் )
===========================================================================================
மகாநூலகமது
மனிதர்கள் வந்தமர்ந்து
நிசப்தத்தில் ஒன்றியிருப்பர்
புத்தகப் பூக்களுடன் ...

தவத்தையொத்த
பொழுதுகளது
துணுக்குகள்
செய்திகள்
கதை ...கட்டுரை
கவியென நீளும்
வாசிப்புகள் ...

பகல் அகலத்தொடங்கி
இரவின்கீற்று மெல்லெழும்ப
நூல்களும் ..நூலகமும்
மூடப்படும் பொழுதது..

மெல்ல இருள்சூழ
மெல்லிய விளக்கொளி
சில முணுமுணுப்புகளை
செவிமடுக்கும்
மூடிய நூலகத்துள் ...

நிதமும் நிகழுமிது
வெளிச்சங்கள்
மௌனத்திலிருக்கும்
எப்போதும்போல்

அறிவியல் புத்தகமொன்று
ஆரம்பித்தது பேச்சை
மனிதர்கள் என்னைத்தொட
ஏன் தயங்குகிறார்கள்

உலகின் உயர்வினிலெல்லாம்
ஏதோவொரு ரூபத்தில்
ஒளிந்திருக்கிறேன்
என்றுணர்வர் என்னையென்றது

வரலாறு மெல்லதன்
வாசிப்பை தொடங்கிற்று
மனிதன் கடந்த சுவடுகளை
நான் அனுபவமாய் தருகிறேன்
எனைச் சீண்ட ஆளில்லையென்றது

தன் தலைமுறையின்
முப்பாட்டனின் பெயரைக்கூட
முழுவதும் அறியாத சமூகம்
சாதி மதமென உழல்கிறது
சாவின் மணி தொடாத
சாதனையாளர் யார் ...

சினிமா செய்திகளையும்
விளையாட்டின் வீரத்தையும்
வாசிக்கும் விடலைக்கு
விடியலின் சூட்சுமம்
விளங்கவா போகிறது
மனதிற்குள் சிரித்தது
வெளிச்சங்கள்

ஓரத்திலிருந்து
மெல்லிய இருமல் சத்தம்
ஓலைச்சுவடியொன்று
ஒலியெழுப்பியது ...

நமக்குள் மோதல் வேண்டாம்
தோழர்களே ...

ஆதிமனிதன்
சைகையாலும்
வடிவங்களாலும்
எண்ணத்தைப் பகிர்ந்தான்

இறகுகளின் தேடல் கொண்டு
வர்ணங்களின் துணையோடு
ஓவியம் உயிர்த்தது ..

எங்களைப்போன்ற
ஓலைகளில்
எழுத்தாணிகளால்
எழுதினான் புலவனன்று
ஓரங்கட்டப்பட்டு நிற்கிறோம்
நாங்களின்று ...

மரமழித்து காகிதம்செதுக்கி
அச்சுக் கோர்த்து அழகாக்கினான்
புத்தகப் பூக்களை ...

கணினிகளும் இணையமுமின்று
இன்னொரு தளத்திற்கு
நகர்த்துகிறது புத்தகங்களை ...

நினைத்த நொடியில்
எண்ணங்களை உலகெங்கும்
தூவுகிறான் மனிதன் ...

மனிதனை போல் மடமையால்
சண்டையிடாதீர் நீங்களும் ..

எழுதியவன் மரித்துப்போவான்
எழுத்துக்கள் மரிப்பதில்லை

பலயுகம் கடந்து
பயணிக்குமவை

தன்னம்பிக்கையையும்
தைரியத்தையும்
வாசிப்பவனுக்கு
என்றுமளிப்போம் ...

மலர்களைப்போல் வாடாது
மறுபடி மறுபடி மலரும்
மந்திரக்காரர்கள் நாம் ...

இன்னாசெய்தாருக்கும்
இனியது செய்யும்
வள்ளுவ வாசகமாய்
கடைசி மனிதனின்
காலம் வரையும்
கரங்களில் தவழ்வோம்

அன்றும் கூட
நம்மை வாசிக்கும்
யாரோவொருவனுக்கு
நம்பிக்கையளிப்போம்
நல்ல நண்பனைப்போல் ...
===============================================
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (5-Mar-15, 1:16 am)
பார்வை : 756

மேலே