தாய்மை சுகம்

இதுவரை உணர்ந்ததில்
சுகமில்லை இதுபோல
- தாய்மை !

இதுவரை இறைவன்
தந்த பரிசுகளில்
சிறந்ததில்லை இதுபோல
- என் மடியில்
தவழும் மழலை!

இதுவரை கேட்டு
உணர்ந்த மொழியில்
இனிதில்லை இதுபோல
- ம்மா என்ற
மழலையின் முதல்மொழி

இதுவரை நான்
கண்ட உலகில்
அழகில்லை இதுபோல
- என் குட்டிகண்ணனின்
கன்னகுழி சிரப்பு

இதுவரை நான்
கொண்டகணவனின் அன்பில்
ஆழமில்லை இதுபோல
- உன்னை தாங்குவதால்
என்னை பூவாய் தாங்கும்
என்னவரின் அக்கறை !

இதுவரை நான்
என்னவன் முகத்தில்
உணர்ச்சி குவியல்கள்
கண்டதில்லை இதுபோல -
தந்தையாய் சிசுவை கையில் தாங்கி
பூரித்து நின்ற சிங்கமாய் அவன்

இதுவரை நான்
உணர்ந்த அணைப்புகளில்
இதமில்லை இதுபோல
- என் மார்புக்குள்
சுருண்டுகிடக்கும் குட்டிபூ !

இதுவரை நான்
அறிந்த வலிகளிலும்
கடிதில்லை இதுபோல
- உன்னை கருவறையிலிருந்து
என் கையருகில் கொண்டுதந்த
பேறுகால வலி !

இதுவரை நான்
என் தலைவனில்
அன்பின் ஊற்றை
கண்டதில்லை இதுபோல
- என்னை தந்தையாக
தாயாக தேற்றி
பற்றிய அன்பு கரம்!

இதுவரை நான்
அடைந்த பேறுகளில்
உயர்ந்ததில்லை இதுபோல
- உன் பூவிதழின் பசிபோக்க
என் பூக்களில் பால்சுரக்க !

இதுவரை நான்
வாழ்ந்த வாழ்க்கையில்
அர்த்தமில்லை இதுபோல
- உனக்காகவே ஓடும்
என் ஒவ்வொரு நிமிடங்களும்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ..........
இதுவரை
உணர்ந்ததில்
சுகமில்லை இதுபோல
- தாய்மை !

எழுதியவர் : யாழினி (26-Mar-15, 2:38 am)
Tanglish : thaimai
பார்வை : 408

மேலே