பிரியாவிடை
ஆண்டாண்டு காலமாக சிறுக சிறுக சேர்த்த நினைவுகள் யாவும் நெஞ்சில் கல்வெட்டுகளாய் பதிந்திருக்க
யாருக்கு நான் விடையளிக்கிறேன்
என் நெஞ்சம் நேசித்த நேற்றைய உனக்கா
கண்ணெதிரே அந்நியனாய் நிற்கும் இன்றைய உனக்கா
இல்லை,
நான் இல்லாமல் பயணிக்க துடிக்கும் நாளைய உனக்கா
யாருக்கு விடை அளிப்பது
சூரியன் பூமிக்கு விடைகொடுப்பது
அதனை மீண்டும் மீண்டும் ஒளியேற்ற
கடல் கரையை பிரிவது
அதன மீண்டும் மீண்டும் முத்தமிட
குஞ்சு கூட்டை பிரிவது
புது வாழ்க்கையை தேடி
திமிங்கிலம் தண்ணீரை பிரிவது
மூச்சு காற்றை நாடி
தன்னலமற்ற அரவணைப்பை தன் நலத்திற்காக அகலும் சுயநலத்திலும்
பிரிவு
அன்பிற்காக அன்பானவர்களை தியாகிப்பதிலும்
பிரிவு
மனங்கள் உடைந்தாலும்
நினைவுகள் மறைந்தாலும்
காரணங்கள் மாறினாலும்
வாழ்க்கையிலிருந்து பிரிவுக்கு இல்லை பிரிவு
ஆனால்,
நேற்றைய தோழனாயினும்
இன்றைய அந்நியானினும்
நாளைய சொந்தமாயினும்
அன்பினால் பிரிந்த எந்த பந்தத்திற்கும் இல்லை அழிவு
எனின்,
விடை அளிக்கவில்லை நான் உனக்கு
பிரியா விடை அளிக்கிறேன் நம் பந்தத்திற்கு.