புத்தனாக எனக்கொரு பூமி வேண்டும் – கே-எஸ்-கலை

சிட்டுகுருவி திங்கநெல்லு இல்லை – சிறு
பட்டுப்பூச்சி தங்கஇடமும் இல்லை !
ஆட்டுமாட்டு கூட்டத்திற்கும் இங்கே – வெறும்
கட்டாந்தரை தவிர ஏதும் இல்லை !

மரமும்நீரும் அழிந்துபோகும் முதலில் – நல்ல
மீனும்உப்பும் ஒழிந்துபோகும் கடலில் !
மனிதன்என்ற மிருகத்தின் வெறியில் – இந்த
மாண்புமிக்க உலகம் அழியும் கதியில் !

காசுதேடி சொத்துதேடி ஓடி – இங்கு
மாசுபட்டு கிடப்போர்கள் கோடி !
கூசும்குணம் எள்ளளவும் இன்றி – பொய்
பேசும்மனம் படைத்தோரும் கோடி !

யுத்தம்செய்து கெட்டுப்போனார் பாதி – காம
மத்தம்கொண்டு செத்துப்போனார் மீதி !
மொத்தமாக ஊரையுண்டு வாழும் – பேடி
எத்தர்களின் ஆட்சியில் தான் பூமி !

சாதிக்காக கொலைசெய்வான் ஒருத்தன் – தான்
சாதிக்க அதைசெய்வான் இன்னொருத்தன் !
மோதிக்கொள்வான் மதத்துக்காக ஒருத்தன் – தன்
நீதிக்காக என்றுசொல்வான் இன்னொருத்தன் !

சில்லறைக்கு நீதிவாங்க முடியும் – சிறு
செல்லரிக்கும் தேகம்விற்க முடியும் !
கல்லறைக்கு போகும்தினம் வரையும்-இங்கு
உள்ளிருக்கும் ஆசை பேயாய் அலையும் !

ஊழல்செய்து ஆளல்இங்கு வழமை – தன்
ஊரை ஏய்த்து மேய்ப்பதுவே கடமை !
ஊனப்பட்டு சாதல் இங்கு நிலைமை – இந்த
உண்மை சொன்னால் நடக்குமிங்கு கொடுமை !

காடெல்லாம் அழிந்து போகும் தரையில் – பெருங்
கடலும்கூட சுருங்கிப் போகும் விரைவில் !
காசுக்காக ஆசைப்பட்ட மனிதன் – ரத்தம்
கக்கிகக்கி செத்துப் போவான் புவியில் !

தூக்கிக் கொள்வான் துப்பாக்கியை காந்தி – நாளை
துளைத்துக் கொல்வான் அகிம்சைஎன்ற சாந்தி !
தூய்மையில்லை வாய்மையில்லை துளியும் – இந்த
துட்டத்தனம் தின்றுபூமி அழியும் !

ரத்த வாடைப்பட்டு பட்டுப்போன மண்ணில்- நான்
செத்து செத்து வாழ்ந்து என்ன லாபம் ?
நித்தம் நித்தம் குற்றம்பெருகும் ஊரில் – எவனும்
உத்தமனமாய் வாழவில்லை ! உண்மை !

புத்தம்புதிய பூமியொன்று வேண்டும்- அதில்
சுத்தமாக காற்றுகொஞ்சம் வேண்டும் !
சத்தமற்ற சுற்றுசூழல் வேண்டும் – அதில் நான்
புத்தனாக கற்றுக் கொள்ள வேண்டும் !

எழுதியவர் : கே-எஸ்-கலை (7-Jun-15, 10:09 am)
பார்வை : 365

மேலே