விரட்டிப் பிடிக்காதே

நம் இன்பக் கிணற்றில் கயிறு
கொண்டு இறைப்பவனும்
நம் துன்பக் கிணற்றில் நீந்திக்
கொண்டு துடைப்பவனும்
நம் தோழன்..

குடம் சுமக்கும் இடை கிள்ளி
குதூகலமாய் நாம் சென்ற பள்ளி
இப்படி கடந்த கால சுகங்களை
இருவிழி கொண்டு வந்து சேர்ப்பாள்
நம் தோழி..

நாம் அடைந்த அன்பினையெல்லாம்
அன்னையிடமிருந்து அவன் பெற்று
பகல் முழுதும் பகைவனாக உறங்கும்
இரவில் நம் மாரோடு கை சேர்ப்பான்
நம் தம்பி..

உச்சந்தலை கொட்டியும்
நித்தமுனை திட்டியும்
மனம் மறைத்த பாசத்துடன்
நமக்காக என்றும் துடிப்பான்
நம் அண்ணன்..

தலை என்னும் தோப்பிலே
சாயா வண்ணம் தென்னை நிற்க
ரிப்பன் கொண்டு கட்டியபடி நம்
உடலோடு ஒட்டிய வண்ணம் நிற்பாள்
நம் தங்கை..

நம் காது திருகும் விரலும்
அன்பை அலசும் குரலும்
அவளோடு பண்பாக கொண்டு
அடுத்த அன்னையாய் இருப்பாள்
நம் அக்கா..

இமை கொண்டு இமை மூடி
விழி கொண்டு விழி மூடி
இதழ் கொண்டு இதழ் மூடி
உயிர் கொண்டு உடல் மூடி காக்கும்
நம் காதல்..

நாம் வேண்டும் ஆசையெல்லாம்
கருத்த அவர் மீசை செய்யும்
வியர்வை சிந்தி உழைத்து நம்
வியர்வை துடைத்து சிரிப்பவர்
நம் அப்பா..

நம் வீட்டுப் பஞ்சமெல்லாம்
அடுப்பங்கரை பாத்திரம் சொல்லும்
அதை நம் செவி சேரவிடாமல் தன்
வயிற்றில் ஈரத்துணியோடிருப்பாள்
நம் அம்மா..

இப்படி நமக்காகவே
இருக்கும் சொந்தங்களின்
இருதயம் இறுகச் செய்யலாமோ..?

விடலைகளே...

விபத்து எனும் பெயரிலே
வீணாக விரட்டிப் பிடிக்காதே
மரணத்தை..!!



செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (22-Jul-15, 1:15 pm)
பார்வை : 901

மேலே