இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா - வினோதன்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா

ஐயிரு திங்கள் சுமந்து
ஊணும் நீரும் மறந்து
வலியாயிரம் உண்டு
எனை ஈன்ற எம்மானே !

என் உயிரியல் விசும்பல்களை
உதைப்பதாய் சித்தரித்து
புன்னகை உதிர்த்தாய் சிரித்து !

மகவழுது தாய் சிரிக்கும்
ஒரே நாளான - என் பிறந்த நாளில்
எனக்கென பிரத்யேக கடவுளை
வரமளித்த இயற்கைக்கு நன்றி !

பசி என் வயிறறியும்
நொடிக்கு முன்னமே
குருதி கடைந்து பாலாக்கி
பருகக் குடுத்தாய் !

நடை வண்டி மீது
நம்பிக்கையின்றி
எனை விழாமல் தாங்க
விழுந்தோடி வருவாய் !

மதகத்தின் தாத்தாவிடம்
நான் வரைந்த "அ"வையே
பெருமையோடு பார்த்த
எனையாளும் அவ்வையே !

ஞானத்தின் ஞானத்தால்
பெற்ற - கண்ணாடி ஊசிக்கு
நீ கொடுத்த அடிதான்
நேர்மையின் அடித்தளம் !

சம்பளத் தேதிகளில்
நீ கொணரும் கூடை
கேக்குகள் - என் நா
காணாத மாதமில்லை !

நான் கேட்ட எதையுமே
நீ நிராகரித்ததில்லை,
வறுமைக் கடலின்
உச்சத்தில் - நீந்திய போதும் !

முஸ்லீம் பாட்டி வீடோ
சுமதி அக்கா வீடோ - வேலை
விட்டு திரும்புகையில்
எனைக் காண ஓடிவரும்
உன் கண்ணெல்லாம் அன்பு !

நம் வீட்டுக் கீற்றின்
நுனி வழியே இறங்கும்
மழைக்கோ மரவட்டானுக்கோ
நான் பயந்ததில்லை - உன்னருகில்
நானிருக்க எதுயென்ன செய்துவிடும் !

உன்னால் முடிந்தவரை
உலகில் சிறந்ததெல்லாம்
எங்களுக்கு கொடுத்தாய்,
தாயாகிய நீயுமே தான் !

வறுமையின் உச்சத்திலும்
வலியின் உச்சத்திலும்
நீ நீயாகவே இருந்தாய்,
நீந்திக் கடந்தாய் - நீதித்
துடுப்போடு - துடிப்போடு !

மனதில் பட்டதை உதிர்க்கும்
உன் நாக்கு பயமறியாது,
நாகரிக உலகில் - நடிக்கத்
தெரியாததன் விளைவது !

வெற்றிடத்திலிருந்து
வெற்றியை ஈட்டியவள் நீ !
போராடி வென்ற எதுவுமே
விலையின் விலாசமற்றது !

என்னை உயிரியலின்
உச்சம் தொடச் செய்தாய்,
இளையவனை கணினியின்
உச்சம் பெறச் செய்கிறாய்,
பண்புகள் பலவும் கலந்து
அன்பு செலுத்த பணிக்கிறாய் !

கவலை இனியேது...?
ஈன்றயிரு புலிக்குட்டிகளின்
வெற்றிகளை எண்ணி
பத்தாயம் அடைக்க
அதிரடியாய் ஆயத்தமாகு !

எம்மிருவர் வெற்றியே
உன் பாதங்களுக்கு
சரியான காலணி !

போதாது இவ்வெற்றி !
போராடியது போதும்
நீ ஓய்வேடு - நாங்கள்
வேட்டைக்கு போகிறோம் !

நீ விரல் நீட்டும் திசையில்
எம் வழிகள் பயணிக்கும் !
நீ விழி நீட்டும் திசையில்
எம் வாழ்க்கை பயணிக்கும் !

(என் தாய் திருமதி. தேன்மொழி அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்)

எழுதியவர் : வினோதன் (26-Jul-15, 1:45 am)
பார்வை : 1518

மேலே