காளியப்பன் கவிதையும் Dr கன்னியப்பன் உரையும் 01
முன் அறிவித்தபடி, இது, கைந்நிலைப பாடல்களைப் படித்தபொழுது நான் உருவாக்கிய வெண்பாக்களில் ஒன்று. இதன் பாடுபொருள்களில் தற்காலச் சூழ்நிலையும், பழங்கால உவமைகளும் பயன்படுத்திக் காட்டப்பட்டுள்ளதை அறிந்து இன்புறலாம்.
இப்படி ஒரு எண்ணம் என்னுள் உருவாகவும், இதற்கு உரைகொடுத்தும் உதவிய நம் தளத்தின் மூத்த கவிஞரும் ,மருத்துவத்துறையில் அனுபவமிருந்தும், தமிழ்ப் பாடல்களின் அமைப்பிலும் ,அழகிலும் தன்னைப் பறிகொடுத்தவருமான Dr.கன்னியப்பருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைசொல்லி அதனைப் பதிவு செய்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.இனி,
காளியப்பன் கவிதையும் Dr. கன்னியப்பன் உரையும் (01)
குடியை விரும்பிக் குழுமுவார் ‘டாஸ்மாக்’
படியில் படரப் பார்த்தும் – குடியால்
சிதையும் குடும்பங்கள் சிந்தனை செய்யார்
எதையினிச் செய்வார் எமக்கு? 01
பொருளுரை(Dr.கன்னியப்பர்):
போதை தரும் மதுவைக் குடிப்பதை பெரிதும் விரும்பி, அரசின் மதுபான விற்பனைக் குழுமக் கடைகளில் கூட்டமாய்ச் சேர்ந்து குடிப்பவர்கள் குடித்து மயங்கிக் கடையின் படிகளிலும், அருகிலும் விழுந்து கிடப்பதைப் பார்த்தும், குடியால் குடும்பங்கள் அழிகின்றது பற்றியச் சிந்தனை இல்லாதவர்களாகிய அரசினர்,வேறு எந்த நன்மைகளை நமக்குச் செய்து காட்டிவிடப் போகிறார்கள்?
மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் தமது நீதி நூல் எனும் பாடல் தொகுப்பினில் 'மது' என்ற ஒரு அதிகாரமே அமைத்து அவர் சொல்லியுள்ள செய்திகளையும் ஒப்பு நோக்கினால்
"மருந்தநேர் மதுவுண்போர் மாண்ட பான்மையால்
அருந்தவப் பாலருக் கப்ப னில்லையால்
பொருந்திய மனையவள் பூண்ட நாண்களத்
திருந்ததே யென்னினு மிழந்த தொக்குமே." என்ற பாடலைக் காணலாம்.
இதன்படி
”நஞ்சுக்கு இணையான கள்ளைக் குடிப்பவர்கள் இறந்தவர்க்குச் சமமாக கருதப்படுவார்கள். அதனால், தவப்பயனால் அடைந்த பிள்ளைகளுக்குத் தந்தையர் இல்லை என்னும் நிலையடைவர்.அவர்தம் மனைவியர் கழுத்தில் தாலி இருந்தாலும் தாலியிழந்தவர் போலவேயாவர்” ஆகையால் மது அருந்துபவர்கள் மனைவி, மக்களை இழந்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்று சொல்லியுள்ளதையும் நோக்கலாம்.
இதைத்தான் நமது கவிஞர், "குடியால் சிதையும் குடும்பங்கள் சிந்தனை செய்யார் "
என்று குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.
இதன் மூலம் குடியின் கேடும், குடிகளைக் காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அரசில் 'மதுக்கடை மாண்புகளால்' விளையும் சீர்கேடுகளும் நினைத்துப் பார்த்துக் கண்டிக்கப்படுவதை உணரலாம்.
==++==