அவள் செய்த கவிதை
நான் அந்த வார
முக்கிய பத்திரிக்கை
ஒன்றில் நடுப்பக்கத்தில்
திகைத்திருக்க
அதில் வந்த கவிதையை
எழுதிய அம்மு,
பாத்திரம் கழுவிக்
கொண்டிருந்தாள்...
அதிர்வுகளோடு
இரண்டாம் முறை படிக்க
படிக்கவே
இனம் புரியாத கோபத்தில்
அந்த பக்கத்தை
கிழித்தெறிந்து விட்டு
விருட்டென்று
வெளியேறினேன்....
நேரம் சென்று மாலை ஆகி
மழை இரவை நனைக்க
தெருமுனை வரை தேடி
வந்து விட்ட
அம்மு,
குடைக்குள் எனை அடைத்து
வீடு நோக்கி நடந்தாள்....
கனத்த மௌனம் கலைக்கும்
சாரலோடு
'அது உன் கவிதைதாம்பா
பேர் மட்டும்தான் என்னுது"
என்றாள் தலை நிமிர்ந்து...
மழை துடைத்த விழியோடு,
"இல்லை, ஒரு போதும்
அப்படி ஒரு கவிதையை
நான் எழுதியிருக்கவே முடியாது"
என்று யோசித்த எனக்குள்
எழுதி விடவே முடியாத
கவிதையாக நிறைந்திருத்த
அம்மு,
இப்போதும் கூட கவிதைதான்
செய்து கொண்டிருந்தாள்,
என் பக்கம் குடையை
கொஞ்சம் அதிகம்
சரித்து........
கவிஜி