மலரட்டும் மனிதங்கள்
இறந்த தும்பிகளையே
ஏந்திச் செல்லும் எறும்புகள்
பிறந்த குழந்தையையும்
கொன்றுச் சிரிக்குது சில மனங்கள்...
யாரிடமிருந்து எதைக்கற்க...?
சக்கரப் பலகையில் வைத்து
இருகால் இழந்த கணவனை
இழுத்துச் செல்லும்
அப்பெண்னிடம் கேட்க வேண்டும்
வாழ்வின் இரகசியத்தை...?
கந்தலாடையுடன்
கரித்துண்டுவைத்து
சாலையோரத்தில்
இறைவனை நிதம்
வரையுமவனுக்காவது
காட்சியளிப்பாரா
இறைவன்...!
ஒன்றே குலமென்று பாடுவோம்
எனக் கொட்டாங்குச்சி
தட்டிப் பாடலிசைக்கும்
கண்ணில்லாதவனைக் காண
யாருக்குமிங்கு விழியில்லை...
மனிதன் யாரெனப் புலம்பும்
மனநலம் குன்றியவன் குரல்கேட்டு
ஒவ்வொரு உள்ளத்திற்குள்ளும்
தேடிக்களைத்துவிட்டேன்
காணவில்லை மனிதர்களை
எனக்கூறிச் சிரிக்குது காற்று...!
பள்ளியில் சேர்ந்த
பழைய தாள்களையும்
நெகிழி கழிவுகளையும்
சேகரிக்கும் அச்சிறுவன்
ஏக்கமுடன் பார்த்து நகர்கிறான்
தனக்குக்கல்வி தரமறுத்த
அப்பள்ளியை...
நகரின் மிகப்பெரிய
உணவகத்தின் முன்
பசியுடன்
பழம் விற்கிறாள்
பாட்டியொருத்தி...
சாலையோரம்
உதிர்ந்த சருகுகளாய்
வீழ்ந்துகிடக்கும்
அம்முதியவரைக் கண்டு
தன் உணவை
அவருக்கு அளிக்கிறாள்
அப்பள்ளிச்சிறுமி
மெல்ல துளிர்க்கத் துவங்குகிறது
மனிதம் அடுத்தத் தலைமுறைக்கும்...
தினம்..தினம்
வாழ்வாதாரத்திற்காய்
வாடுகிறது ஓர் கூட்டம்...
மெத்தைக்கடியில்
பணத்தைப் பதுக்கி
தூக்கத்தைப் பெறத்
துடிக்கும் மனிதர்களே...
இன்றே இறந்து விடுவோம்
எனத்தெரிந்தும்
சிரித்துக்குலுங்குகிறது பூக்கள்
நீயேன் மனிதா
வாழும் நொடியெங்கிலும்
செத்துக்கொண்டிருக்கிறாய்...!
நாளை பிறப்பவனுக்கு
எதைச் சேமிக்கிறாய்...
இன்று இருப்பவனுக்கு
ஒருவேளை உணவு கொடு...
மனிதங்கள் மலரட்டும்
மறு ஜென்மத்திலும்...!
------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்