அரவாணி மனம்

படைத்தான் இறைவன் எங்களையே
பழிகளை சுமக்கும் பிறவியென
ஆணிலும் பெண்ணிலும் இல்லாமல்
அலிஎன்று அனைவரும் அழைக்கும்படி

ஆண்களைப் பழிக்கும் பிறப்பென்று
ஆணினம் எங்களை பழிக்கிறது
பெண்களை பழிக்கும் பிறப்பென்றே
பெண்ணினம் எங்களை வெறுக்கிறது

இரண்டும் கெட்டான் நிலையினிலே
இறைவன் எங்களை ஏன்படைத்தான்?
எங்கும் வாழ்ந்திட வழியின்றி
சங்கட நிலையினை ஏன்கொடுத்தான்?

ஒருவரும் எங்களை மதிப்பதில்லை
திருமண வாழ்வுக்கும் வழியில்லை
உருவத்தை பார்த்திடும் மனிதஇனம்
உள்ளத்தை பார்த்திட நினைப்பதில்லை

உங்களைப் போன்றே நாங்களும்தான்
உணர்ச்சிகள் சுமந்தே வாழ்கின்றோம்
எங்களை கிண்டல் செய்வதினால்
என்னதான் கிடைத்திடப் போகிறதோ?

ஊனமாய் மண்ணில் பிறந்திருந்தால்
உதவிடவே சிலர் முன்வருவர்
ஈனப் பிறப்பாய் பிறந்ததனால்
இம்சைகள் சுமந்தே வாழ்கின்றோம்

பிற்கால வாழ்க்கையில் தாங்கிடவே
பிள்ளைகள் என்பது கனவாச்சி
பிள்ளையும் பெற்கவும் வழியில்லை
பெற்றிடும் ஆண்மையும் உடலில்லை

அன்புள்ளம் கொண்ட மனிதர்களே
அனைவரையும் கெஞ்சிக் கேட்கின்றேன்
எங்களை வெறுக்கா திருந்தாலே
நாங்கள் உங்களை வணங்கிடுவோம்.
எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : பாவலர். பாஸ்கரன் (10-Jan-16, 8:44 pm)
பார்வை : 63

மேலே