எங்கள் வாழ்வும் வளமும்

முன்தோன்றி மூத்த குடியாம்
தமிழ்க் குடியின் தாய்மொழியே!
பின்தோன்றி அழிந்த மொழிகள்
பலபலவாய் ஆன போதும்
மின்னலென ஒளிவீசி நிற்கும்
மாண்பு கொண்ட செம்மொழியே!
உன்னிளமைத் தோற்றம் தன்னால்
உலகெல்லாம் ஆளு கின்றாய் !

எங்களது வாழ்வும் வளமும்
மங்காமல் இருக்க என்றும்
பொங்கிடுமோர் இலக்கியத் திறனும்
புதுமையுடன் பொலிவும் அழகும்
பங்கங்கள் வந்த போதும்
பதுங்கிடாத பண்டைத் தமிழே
அங்கங்கள் அழிந்த போதும்
உன்னழிவைத் தடுத்து நிற்போம்!

மொழிஉன்னை அழிக்க எண்ணும்
மூடர்கள் முளைத்து வரினும்
பழிஉன்னை அண்ட நாங்கள்
பார்த்தினியும் இருக்க மாட்டோம்
விழியாக இருக்கும் உந்தன்
விழிபிதுங்க வைப்போர் தம்மை
குழியினிலே தள்ளி விட்டு
குட்டிடுவோம் அவர்தலை யினிலே.

தமிழினிலே கல்வி கற்று
தரணியிலே நாமே உயர்வோம்!
தமிழினிலே அறிவு பெற்று
தண்ணிலவில் கொடியும் ஏற்றி
தமிழ்கொண்டு செவ்வாய் சென்று
தன்னாட்சி உருவாக் கிடுவோம்!
தமிழ்மொழியால் உலகி லெல்லாம்
தழைத்தோங்கும் செயல்கள் செய்வோம் !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (10-Jan-16, 10:17 pm)
பார்வை : 109

மேலே