அம்மா ஓர் அதிசயம்

* * * * * * * * * *
உடைந்து
உயிர் திரட்டி
உதிரத்தால்
உணர்வெழுதி
உருவாக்கும்
உலகின் மறை !
உயிர்ப்
பிரபஞ்ச
உன்னதம் !
அன்பிற்கும்
அகர மொழிக்கும்
இப் பிறப்பிற்கும்
முதல் முகவரி !
துக்கம் துன்பம்
தூரம் எதிலும்
துவளாத
மடி ஏந்திச்
சுமக்கும் மலை !
பாரம் கருணை
பக்குவம் எதிலும்
பார் முழுதும்
தாங்கும்
உயிர் மரம் !
அன்பையும்
அணைப்பையும்
கருவாக்கி
உருவாக்கி
உருக்குலையும்
அடர் அருவி !
மன்னிப்பதிலும்
தண்டனையின்றி
குற்றம் களைவதிலும்
உச்ச நீதிமன்றம் !
கொட்டிக் கொட்டி
கொடுத்தாலும்
தீர்ந்து விடாத
பாசத்தின்
புதையல் !
ஆண்டவனின்
பேசும்
நடி பாத்திரம் !
அர்ச்சனை இல்லாது
வரங்களை
அள்ளி அள்ளிக்
கொடுக்கும் கடவுள் !
அரண்மனையும்
ஆலய கோபுரமும்
விஞ்சி விட்ட
சொர்க்காபுரி !
ஒரே வார்த்தையில்
அன்பொழுக
எழுதப்பட்ட
பெருங் காப்பியம் !
எதுவித
எதிர்பார்ப்பும் அற்ற
கலப்படமற்ற
பாச
நிறை கலசம் !
உயர்
உணர்வன்பின்
ஒட்டு மொத்தம் !
அவள்
ஓர்
அற்புத மொழி !
அவளைப் பாட
தமிழில் வார்த்தை தேடி
தோற்றுப்போனது
என் கவிதை .........!
" அம்மா ! "
" அவள் ஓர் அதிசயம் "
- தமிழ் உதயா -