அறம் சொல்லும் குறள்

அறம் சொல்லும் குறள்
- - - - - - - - - - - - - - - - - - - - -

அகரத்தில் சொல்லெடுத்து
சிகரத்தில் பொருள் வடித்து
அறம் பொருள் இன்பம்
என பால் பிரித்து
தமிழ் மறை எடுத்து
பொய்யா மொழி புனைந்து
வையகத்துள் வான் அமைத்த
வள்ளுவனைப் பாட
எனக்கும் தமிழுண்டோ ?
அதற்கு தகவுண்டோ ?

பாயிரத்தில் வாழ்த்துப் பாடி
இல்லறம் துறவறம் ஊழியல்
என அறம் பாடி
அரசியல் அமைச்சியல்
ஒழிபியல் அங்கவியல்
என பொருள் பாடி
களவியல் கற்பியல் என
காமத்துப்பால் பாடி
ஈரடியில் புதைத்து
எண்ணற்ற பொருளமைத்து
வாழ்வை வடிவமைத்த
வள்ளுவனைப் பாடுவதா ?

முப்பாலில் முகமமைத்து
வாயுரை வாழ்த்துரைத்து
உத்தர வேதம் அமைத்து
உலகப் பொதுமறை வரைந்து
தெய்வ நூல் அது தேன் தமிழுக்கு !
அமிழ்தினித்த வரிகள்
தமிழ் மொழியின் சுருதிகள் !
அறம் விளைந்த குறள்கள்
நிறை மொழியின் அகல்கள் !

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (17-Jan-16, 6:39 pm)
பார்வை : 186

மேலே