என் உதிரம்தான் வேண்டுமென்றால் தந்திருப்பேனே

என் கண்ணீர்த் துளியை
சிற்பங்களாக்கி
வடித்துக் காட்டினேன்
பொய்யென்றாய்!

கவலைச் சிறகுகளை
விரித்துக்கொண்டு துன்ப வானவெளியில்
வலம் வந்தேன்
வேஷம் என்றுரைத்தாய்..!

உன் விழிகளால்
மின்னல் வெட்டப்பட்டு
இறந்து போனேனே
கண்டு கொண்டாயா?

கல்நெஞ்சக்காரியே
என் கண்ணீரைப்
பருகத்தான்
காதல் வேடமிட்டாயோ..!

என் துடிப்பை
நிறுத்தி விட்டு
உன் பெயரைச்
சொல்ல இதயத்திற்குக்
கட்டளையிட்டேன்...
தவறா அது?

ஓ... காந்தப் பெண்ணே!
உன்னை நெருங்கத்தான் என்
பூ நெஞ்சை
இரும்பாக்கிக் கொண்டேன்...
ஆனால்,
நீ காந்தமல்ல
கருங்கல்லென்று
கற்றுக் கொடுத்து விட்டாய்...

அடி கள்ளியே!
என் இதயத்தை
களவாடி
காயிலாங்கடையில் போட்டு
வியாபாரம் செய்கிறாயே...
நியாயமா இது?

நீ...ஓர்
ஏமாற்று பேர்வழி
என்று தெரிந்திருந்தால்
உன் இரவு பகலை - நான்
தீண்டியிருக்கவே மாட்டேன்...

ஏனடி...
காற்றடைக்கப் பட்ட
பலுனை
ஊசியால் குத்தி குத்தி
வேடிக்கை பார்க்கின்றாய்...?

உன் கவலைகளைக் கொட்டி
என்னை
குப்பை கூளமாகக்கி விட்டாய்

என் விழிகளில் புகுந்து
வலி தந்துவிட்டாய்...

மௌனத்தில் புகுந்து
மானத்தை வாங்கிவிட்டாய்...

மூச்சில் புகுந்து மூர்ச்சையாக்கி விட்டாய்...

போதுமடி போதும்...

உன் வீணைகள்
விரல்களைக் காயப்படுத்தியது
போதும்,

உன் காதல் வேஷம்
கல்லறையை
திறந்தது போதும்...

உன் பார்வை
பாதாளத்தில்
தள்ளி விட்டது போதும்...

உன் சுவைப்பேச்சுகள்
சவமாக்கியது போதும்...

உன் அன்பெனும்
ஆழ்கடலில் - என்னை
தள்ளிவிட்டு சாகடித்தது
போதும்...

உன் பேரழகில்
புதைக்குழியைப்
பார்த்தது போதும்...
போதுமடி போதும்!
நான் ஒன்றும் புவியல்ல,
உன் சுனாமி அலைகளை
என் மீது மோதவிட...

ஏய் மரணப்பேயே!
உன் தாகம் தணிக்க
என் உதிரம்தான்
வேண்டுமென்றால் தந்திருப்பேனே...
ஏனடி? என் இதயத்தில் ஓடும்
உன் காதல் தேனைப்
பருகிச் சென்றாய்...

இத்தோடு நிறுத்திக்கொள்!

என் இறுதிச்சடங்கிற்கு
உன் பூக்களும் வேண்டாம்,
உன் கண்ணீரும் வேண்டாம்,
இரண்டும் என் கல்லறைக்கு
நெருப்பு கங்குகள்தான்...!

எழுதியவர் : முனைவர் க.லெனின் (22-Jan-16, 12:25 am)
பார்வை : 97

மேலே