சாசனப் படுக்கை
நிகழ்வுகளுக்குள் ஒதுங்காமல்
மனம் கலைந்து
ஒழிந்தது
யாப்பிட்ட வலம்புரிகள்
இசைத்திட்ட மோன கானங்கள்
காற்றில் கரைந்து
மாட்சிமையில் மயங்கித்
தெளிந்தது
இனிவரும் நாளும்
ஏகாதசியாயிருக்க
போய்வந்த
போகனின் பற்களும்
அழிந்தது
பள்ளு பாட்டறைந்த பாரதி
கல்லுடைப்பானுக்குச் சொன்னான்:
``பூலோகம் சுற்றவில்லை
காலாவதியான
கள்ளுப்பானை கலங்கி வழிந்தது ''
இருக்கின்ற ஒன்றிரண்டு சிகையும்
இல்லாமல் போய்விடுமென்று
பார்வையாளர் புத்தகத்தில்
பதியவிட்டுப் போன
இதைப்படித்த என் நண்பனின்
எழுத்தில்
மேதாவித்தனம் தெரிந்தது.