பெப்ரவரி 14ல் நீ வருவாயென----முஹம்மத் ஸர்பான்

என் தாயின் கருவறையிலிருந்து மண்ணில் நான்
பிறந்த போது,கடவுள் உன் பெயரையும் என்
பெயரையும் இணைத்து எழுதிவிட்டான்.


இருவரும் ஒன்றாம் வகுப்பில் சந்தித்துக்கொண்டோம்.
எனக்கு சித்திரம் வரையத்தெரியாது.என்னவள் தான்
வரைந்து தருவாள்,சிவப்பு நிற கார்ட்டூன் பொம்மை
போட்ட என் வர்ணக்கொப்பியில் அவள் பஞ்சுவிரல்களால்
கீறித்தந்த ரோசாப்பூவை அவள் நினைவுகள் தோன்ற
-இன்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்.


மாலையில் நாம் ஒன்றாக விளையாடுவோம்.களவில்
தோட்டத்திற்கு சென்று எருக்கலம்பூ பறித்து,நூலில் கோர்த்து
அவளுக்கு போட்டு விடுவேன்.சின்னச்சட்டி,பானையிலே
ஈரமண் தோண்டி மண்புழு பிடித்து எறும்பு கடிக்காமே
பாதுகாப்போம்.அந்த நினைவெல்லாம் இன்று எம்மை
-மேலும் நேசிக்கச்செய்கின்றன.

மாலை நேர வகுப்புக்குச் சென்று முடிந்து வரும் வேளை,அவ
கைநீட்டிச் சொல்வா! கலர்மிட்டாய் வாங்கித்தரச்சொல்லி,என்
காற்சட்டை பக்கற்றிலுள்ள இரண்டு ரூபாவைக் கொடுத்து கைநிறைய
மிட்டாய் வாங்கிக்கொடுப்பேன்.சிரித்துக்கொண்டு உண்டு வருவாள்.
அப்போது நிலவிடம் அவ கேட்பா, உனக்கு வேணுமா?என்று....,அவ
எச்சுப்பட்ட விரலால் என் கன்னத்தில் தட்டி விட்டு வீட்டுக்கு போவா!
-இன்று அவள் முகம் கண்டு பல நாட்களாகி விட்டது.


அவள் கன்னிப்பொண்ணாய் மாறினாள், வழக்கத்திற்கு
மாறாக அந்த மஞ்சள் நிலவின் நெற்றியில் மின்னும் சிவப்பு
நிற குங்குமப்பொட்டு,கண்ணுக்கு மை பூசியிருப்பா,உதட்டுக்கு
சாயமும்,பட்டுத்துணி பாவாடை,தாவணி கட்டி,என்னைக்கண்டு
முதன்முதலாக ஒளித்தாள்.பேசத் தயங்கினாள்,அவள் மாறுதல்
கண்டு நானும் நாட்குறிப்பில் கவிதை எழுதத்தொடங்கிவிட்டேன் .
-இன்று வரை எழுதிக்கொண்டிருக்கிறேன்.



உயர்தரம் கற்று மேல்படிப்புக்கு என்கிட்டே ஒரு வார்த்தை
சொல்லாமல் வெளிநாடு போய்விட்டா?தினமும் அழுவேன்.
நாங்கள் இணைந்த தருணங்களை கடவுளிடம் யாசகம் கேட்டு
கனவில் மீட்டிக்கொண்டிருக்கிறேன்.அவளுக்காய், கலர்மிட்டாய்
வாங்கி வெச்சிருக்கேன், எருக்கலம்பூ மாலையை வாடாமல்
தண்ணி தெளித்து வெச்சிருக்கேன்,அவளுக்கு பரிசாக கொடுக்க
தொண்நூற்றொன்பது அட்டை வாங்கி பத்திரமாய் வெச்சிருக்கேன்,
நாளை வரும் காதலர் தினத்துக்காய் நூறாவது அட்டையும் வாங்கி
-காத்துக்கொண்டிருக்கிறேன் நீ வருவாயென.....!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (11-Feb-16, 5:21 pm)
பார்வை : 148

மேலே