இதுதாண்டா காதல்

இதுதாண்டா... காதல்....
--------------------------------

மித்திரன், எந்த நொடியில் சங்கீதாவைப் பார்த்தானோ, ஆயிரம் நிலா அவனை சுற்றி உலா வருவதுபோல் உணர்ந்தான்...இவன், நண்பனின் அண்ணன் கல்யாணத்திற்கு வந்திருக்கிறான்..

இங்குதான், கல்யாணப் பெண் அருகில் வெளிர் நீலப் பட்டுப் புடவையில் ஊஞ்சலை ஆட்டிக்கொண்டு தன் நீண்ட கூந்தலை முன் போட்டுக்கொண்டும் இருந்தாள் சங்கீதா.!!

மித்ரனின் கண்கள் சங்கீதாவைப் பார்த்ததும் அவனால் தன் பார்வையை வேறு பக்கம் திருப்ப முடியவில்லை... இளங்காற்று அவன் மேனியை மெல்ல தழுவியதுபோல் உணர்ந்தான்...அந்தக் கல்யாணத்திற்கு எத்தனையோ இளம் பெண்கள் வந்திருந்தனர்...ஆனால், இவன் பார்வையும், மனசும் சங்கீதாவின் பக்கம்தான் சென்றது..அது ஒரு தனி ஈர்ப்பு.... கொள்ளை அழகு என்றெல்லாம் கூறிவிட முடியாது...மாநிறம், என்றாலும், முகத்தின் களை இவனை சுண்டி இழுத்தது....

முஹுர்த்தம் முடிந்தது...! சங்கீதா அங்கு இருப்பவர்களுக்கு தாம்பூலம் கொடுத்துக்கொண்டிருந்தாள்....

மித்ரனுடன் அவன் இரண்டு நண்பர்கள் கூட வந்திருந்தனர்,,, " ஏய் ! மித்ரா... வாடா சாப்பிட போகலாம்... ஆபிசில் 2 மணிநேரம்தான் லேட்டாகப் போகலாம் .. சீக்கிரம் வா... ! " அவசரப்படுத்தி இவன் கையை இழுத்தான் ஒரு நண்பன்..இவன் அசையவில்லை...பார்வை முழுதும் சங்கீதா செல்லும் வழியே சென்றது....ஆனால், தான் பார்ப்பது மற்றவர்க்கு தெரியக்கூடாது என்பதிலும் கவனம்....வேறுவழில்லாமல் சாப்பிட சென்றான்...

இரண்டு நாட்கள் அவன் , அவனாய் இல்லை...இதுவரை அந்தமாதிரியான மனோபாவத்தில் அவன் இருந்ததே இல்லை... " சங்கீதா ...! அவளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமே.... எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு.... என்ன செய்யலாம்? யாரிடம் கேட்பது? நானே கேட்டால் நல்லா இருக்குமா? " மனசில் ஆயிரம் எண்ணங்கள்...

அன்று இரவு, அம்மா சமையல் முடித்து கொஞ்சம் ஓய்வாய் அமர்ந்திருந்தாள்..அவள் பக்கத்தில் சென்று உட்கார்ந்தான் மித்திரன்.. இவனுக்கு வயது 26..பெரிய கம்பெனியில் வேலை.. ஒரே தங்கை..அப்பா ரிடையர் ஆகி விட்டார்..இவன், மிகவும் பொறுப்பானவன்.. பாசமும் அதிகம்...

" அம்மா..! நான் 2 நாட்கள் முன்னாடி என் பிரின்ட் அண்ணன் கல்யாணம் போயிருந்தேன். அங்கே, கல்யாணப் பெண்ணின் மாமா மகள் சங்கீதாவைப் பார்த்தேன். எனக்கு என்னமோ அவளை ரொம்ப பிடிச்சிருக்கு.. நானே அவளைப் பற்றி கேட்டு தெரிஞ்சுக்கறது அவ்வளவு நல்லா இருக்காதுமா.. என் பிரின்ட் போன் நம்பர் கொடுக்கிறேன் நீ கேட்டு தெரிஞ்சுக்கோ அப்புறம் முடிவு பண்ணலாம்மா... அப்பாகிட்டேயும் அபிப்ராயத்தை கேட்டுக்கோ..." மிகவும் பவ்யமாகவும், பண்பாகவும் சொன்னான்...

" அட! என்னடா இது? சரி. சரி.. கொடு நாளைக்கு அப்பா கிட்ட கேட்டுட்டு பேசறேன்... விவரம் தெரிஞ்ச அப்புறம் முடிவு செய்யலாம்..." என்றாள் பாசமுடன் அம்மா...

மனம் லேசானதுபோல் தோன்றியது மித்ரனுக்கு...
ஒரு வாரம் போனதே தெரியவில்லை..

"உங்க அபிப்ராயம் என்ன? சங்கீதாவிற்கு வயது 22. போன மாசம்தான்
எம். எஸ். சி.. முடிச்சிருக்கா. ஒரே அண்ணன் ... கல்யானம் ஆகி பெங்களூர்ல இருக்கா. அவருக்கு ஒரே குழந்தை..அப்பா, மிலிட்டரியில் இருந்து ரிடையர் ஆகி இப்போ ஒரு டிடக்டிவ் எஜென்சியிலே வேலை பார்கிறார்..நல்ல குடும்பம்தான்..நீங்க சரீன்னு சொன்னால் நான் அவ அம்மாகிட்டே பேசறேன்." மூச்சு விடாமல் கணவரிடம் பேசினாள் அம்மா...

"எல்லாம் நல்லாத்தான் இருக்கு..கொஞ்சம் மித்ரனிடம் பேசணும்" அப்பா சொன்னதும் அந்தப் பக்கம் வந்த மித்ரனிடம் அம்மா " வாடா! அப்பா உன் கிட்டே பேசணுமாம். உட்காரு.." என்றாள்...

" மித்திரன்.... அவா கிட்டே பேசறோம்... பாசிடிவாக நினைப்போம்... ஆனால், சரி வரவில்லை என்றால் நீ ஒன்றும் மனசை போட்டு வருத்திக்கக் கூடாது... பார்த்தே, பிடிச்சிருந்தது... ப்ராப்தம் இருந்தால் கல்யாணம் நடக்கும்... இதற்காக அதையே நினைச்சுண்டு ஒரு தவறான பாதையில் போகக்கூடாது...இது ஒ.கே. தானே? " அப்பா பேசியது நியாம்தான் என உணர்ந்தான்...

" அப்பா ! ஒன்றும் பிரச்சனையை இல்லை...நான் பக்குவப் பட்டவன்.. நீங்க பேசுங்கோ.." சுருக்கமாய் தன முடிவை சொன்னான் மித்திரன்...

இரண்டு வாரங்கள் கழித்து...

தோழியர் கிசு கிசுக்க வெட்கத்தால் சிவந்தது சங்கீதா கன்னம்..."போடி... " என்று இவள் செல்லமாய் திட்டினாள்... அப்பொழுது உள்ளே நுழைந்த மித்ரனின் அம்மா " சங்கீதா...! நேதிக்கு கடை கடையாய் ஏறி, இறங்கி உனக்காக மித்திரன் வாங்கிய புடவை இது... பிடித்திருந்தால் கட்டிக்கோமா... " கையில் கொடுத்தாள்...

இளம் ரோஸ் கலர் புடவை... மிகவும் அழகாய் இருந்தது...

பத்து நிமிடங்களில் அந்தப் புடவையில் நிச்சயதார்தத்திற்கு தயாரானாள் சங்கீதா...

இதுதாண்டா காதல்...!!!!

மைதிலி ராம்ஜி

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (29-Feb-16, 11:15 am)
பார்வை : 412

மேலே