வைஷ்ணவிக்கு புரிந்தது
வைஷ்ணவிக்கு புரிந்தது...
------------------------------------------
"வைஷ்ணவி ! என்ன பழக்கம் இது? பல்லவி கையிலே இருக்கிற பூவை இப்படி பிடுங்கி தூக்கிப்போடரே? என்ன ஆச்சு உனக்கு? " அம்மாவிற்கு அடித்து விடலாம் என்றுதான் தோன்றியது... ஆனால், பொறுமையாய் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள்...
ஆம்! வைஷ்ணவி, பல்லவி இரண்டு பெண்கள் இவளுக்கு... இருவருக்கும் வயது வித்யாசம் 7 ... ஆரம்பத்தில் இருந்தே வைஷ்ணவிக்கு பல்லவி மீது கொஞ்சம் பொறாமையும், வெறுப்பும் இருந்தது...
வைஷ்ணவி மிகவும் சுட்டி... அவளை பார்த்து பார்த்து வளர்த்தாள் அம்மா, பாட்டி எல்லோரும்..
அவள் வீட்டிற்கு ஒரே பெண் குழந்தை ... மற்றவர்க்கு எல்லாம் ஆண் குழந்தைகள் ஆனதால் இரு பக்க பாட்டிகளும் இவளை போற்றி வளர்த்தனர்....
பல்லவி பிறந்தவுடனே. இயற்கையாக எல்லோரது கவனமும் குட்டிக் குழந்தை மீது சாய்ந்தது...
வைஷ்ணவி சற்று கலங்கியே இருந்தாள்... எதற்கெடுத்தாலும் கோபம், ஒரு பிடிவாத அழுகை என்று அவள் குணம் மெல்ல மாறத் துவங்கியது.... ஆரம்பத்தில் இதை சாதாரணமாக எடுத்துக்கொண்ட அம்மாவால் , நாள் செல்ல செல்ல இதை அப்படியே விட்டு விட முடியவில்லை....
பல்லவி கையில் எதாவது இருந்தால் அதை பிடுங்கி கீழே போட்டு உடைப்பது, அவளை கிள்ளி விட்டு அழுவதை ரசிப்பது, , கொஞ்சம் மிளகாய் தூளை எடுத்து பல்லவி உள்ளங்கையில் தடவுவது என்று எத்தனையோ சேட்டைகள் செய்ய ஆரம்பித்தாள் வைஷ்ணவி...
பல்லவி பிறந்து 5 ஆண்டுகள் ஓடிவிட்டன...
" எனக்கு பயமா இருக்கு... ஏன் இந்த வைஷ்ணவி இப்படி நடந்துக்கறா.. டாக்டர் கிட்ட கூட்டி போகலாமா? " மெல்ல தன கணவரிடம் கேட்டாள் அம்மா..
" ஒன்னும் இல்லை... எல்லாம் சரியாகிவிடும்..." சாதாரணமாய் சொன்னார் அப்பா.. இவள் சமாதானப் படவில்லை...
பள்ளியில் இருந்தும் புகார்கள் வர ஆரம்பித்தன.... மற்ற பசங்களை மிரட்டுவது... அடிப்பது என்று... வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டாள்... கொஞ்ச நாட்கள் பாட்டி வீட்டில் விட்டு வைத்தனர்..... அங்கு பிடிவாதம் செய்ததால் மாமா இங்கு திருப்பி அனுப்பி விட்டார்... ;;
இனி தாமதித்தால் நல்லதில்லை என தோன்றியது ....
மனோதத்துவ நிபுணரிடம் அழைத்து சென்றனர்....
" உங்களின் கவனம் முழுவதும் உங்கள் இரண்டாம் குழந்தையிடம் சென்றதால் ஏற்பட்ட மன அழுத்தம்... கொஞ்ச காலம் ஆகும் இது சரியாக .... வேறு நல்ல சூழ்நிலை ஏற்படுத்தணும்.... இரண்டு மாதங்களுக்கு வாரம் ஒரு நாள் இங்கே அவளை அழைத்து வாருங்கள்... பார்க்கலாம்..." டாக்டர் சொன்னதில் ஒன்றும் பெரிய மாற்றம் தரப்போவதில்லை என்று அம்மாவிற்கு தோன்றியது...
டாக்டர் கூறியபடி வைஷ்ணவி வாரம் ஒரு நாள் அங்கு அழைத்து செல்லப்பட்டாள்... இரண்டு மாதம் ஆனது ....
" வைஷ்ணவியை நன்கு தெளிவாய் புரிந்து கொண்டேன்... ஒன்று செய்யுங்கள்... பல்லவியை ஹாஸ்டல் அல்லது உங்கள் அம்மா வீட்டில் ஒரு ஆறு மாதங்கள் அல்லது முடிந்தால் ஒரு வருஷம் விடுங்கள்... 15 நாட்களுக்கு ஒரு முறை உங்கள் வீட்டிற்கு அழைத்து வாருங்கள் ... கொஞ்சம் நாள் செல்லட்டும் பாப்போம்..." கூறி முடித்தவுடன் அம்மாவின் முகம் சற்று வாட்டம் அடைந்ததை கவனித்த டாக்டர் " ஒன்னும் கவலை படாதீர்கள்.... கொஞ்சம் காலம்தானே நான் சொன்ன மாதிரி செய்யுங்கள்.... உங்கள் முழு கவனம் வைஷ்ணவிமேல் தான் இருக்கணும்... " கட்டளை இட்டாற்போல் ஆனால் தெளிவாய் கூறினார்...
" சரி ... " என்று அரை மனதாய் கூறி விட்டு வந்தனர்....
பல்லவி மாமா வீட்டில் விடப்பட்டாள்...
இங்கு வைஷ்ணவி அவள் 7 வயது வரை எப்படி இருந்தாளோ அந்த மாதிரியான சூழ்நிலை வந்தது... அவளை சுற்றியே எல்லோரும் இருந்தனர்... வைஷ்ணவி முகத்தில் சந்தோஷம் தெரிந்தது... இழந்ததை திரும்பி பெற்ற இன்பம் அவள் பார்வையில் இருந்ததை நன்கு உணர்ந்தாள் அம்மா..
10 நாட்கள் சென்றன.... வைஷ்ணவி சற்று தனிமையில் இருந்தாற்போல் உணர்ந்தாள் .... தன்னிடம் எல்லோரும் இருந்தாலும் யாரையோ இழந்தாற்போல் தோன்றியது அவள் மனதில்....
அன்று பல்லவி வந்தாள்.. எல்லோரும் மிகவும் கவனமாக தங்கள் பாசத்தை அவளிடம் வெளிப்படுத்தவில்லை.... சாதரணமாக இருந்து விட்டு திரும்பினாள் பல்லவி..
3 மாதங்கள் கடந்தன...
ஒரு நாள்... வைஷ்ணவி அம்மாவிடம்...
" அம்மா..! பல்லவி எப்ப வருவா? என்கூட விளையாட யாருமே இல்லை... அவ நல்ல பாடுவா... ஆடுவா... நான் அடித்தால் கூட அழமாட்டா.. சிரிப்பா... அவளை பார்க்கணும் போல இருக்கு...." அம்மா கண் கலங்கி விட்டாள்..
என்ன சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை...
இரண்டு நாட்கள் போகட்டும் என்று அம்மா விட்டு விட்டாள்..
" அம்மா...! பல்லவி கிட்ட கூட்டிண்டு போ... அவளை பார்க்கணும்." திரும்ப கேட்டாள் வைஷ்ணவி...
அன்று மாலை டாக்டரிடம் பேசினர் பெற்றோர்.... " கொஞ்சம் மாற்றம் இருக்கு வைஷ்ணவி கிட்ட...ஒன்று செய்யுங்க... வைஷ்ணவியை பல்லவி இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்லுங்கள்... பார்போம்.." என்றார் டாக்டர்...
மறுநாள் , மாமா வீட்டிற்கு இவர்கள் சென்றனர்... பல்லவிக்கு நிறைய சாப்பிட வாங்கி கொண்டாள் வைஷ்ணவி கூடவே அவளுக்கு பிடித்த குரங்கு பொம்மை..
பல்லவியை பார்த்த உடனேயே அவளை கட்டி அணைத்துக் கொண்டாள் வைஷ்ணவி....
டாக்டர் சொன்ன மாதிரி கொஞ்சம் நேரம் இருந்து விட்டு திரும்பினர்...
பல்லவி தன்னுடைய உடன் பிறப்பு என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் வைஷ்ணவி மனதில் தோன்ற ஆரம்பித்தது....
8 மாதங்கள் முழுமையாக பால்லவி இல்லாத வீட்டில் வைஷ்ணவி.... அம்மா, அப்பா, பாட்டி, அத்தை எல்லோரும் " வைஷ்ணவி..! வைஷ்ணவி...! " என்று தன்னை பார்த்து பார்த்து கவனித்தது இவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும், பல்லவி கூட இல்லை என்கிற ஏக்கம் வர ஆரம்பித்தது....இப்பொழுது அந்தப் பொறாமை இல்லை ..... வெறுப்பு இல்லை...
டாக்டர்..." நீங்க மெல்ல பேசுங்க வைஷ்ணவியிடம்... பல்லவியை இங்கு கூட்டி வரலாமா என்று கேளுங்கள்.... அவளின் பதில் என்ன என்பதை வைத்து அவளது பக்குவ நிலை புரியும்.. அப்புறம் முடிவு செய்வோம்..."
அன்று இரவு மெதுவாக அம்மா....
" வைஷ்ணவி..! பல்லவி இங்கிருந்து போய் ரொம்ப நாள் அச்சு... அவளை கொஞ்ச நாள் இங்கே கூட்டி வரலாமா? " பயந்துதான் கேட்டாள்..
வைஷ்ணவியின் முகத்தில் சந்தோஷம்... அவள் கண்களில் ஒரு எதிர்பார்ப்பு.... " அம்மா.... நாளைக்கே கூட்டி வாமா... நானும் வரேன் உன்கூட..." இந்த பதிலை சற்றும் எதிர் பார்கவில்லை பெற்றோர்....
இதோ பல்லவி வந்துவிட்டாள்... இன்று, வைஷ்ணவி அவளின் எதிரி அல்ல... அக்காவாக.....
மீண்டும் வருவேன்...
மைதிலி ராம்ஜி