இப்படிக்கு நட்பு
சருகுகளாகிப் போனது
நண்பர்கள் கூட்டம்
மொட்டை மரமாய் - வாழ்கை
ஒவ்வொரு நட்பும்
சருகுகளாகி
ஒரு ஒரு தேசத்தில் -விதி
விலாசங்கள் மட்டும்
ஒரே ஒரு குப்பைக் கிடங்கில் - பேஸ்புக்
பிழைக்க வந்த இடத்தில்
ஒரு சில நல்ல உள்ளங்கள் - ஆறுதல் பரிசு
கலர்புள்ளாய் புகைப்படம்
கறை படிந்த எண்ணங்கள்
நண்பர்கள் சேர்ந்தெடுத்த - செல்பி
ரயில் வரும் போது மட்டும்
பேசிக்கொள்ளும்
தண்டவாளங்கள் - செல்போன்
தொடர்பாடல் போதுமாம்
தண்டவாளங்களுக்குள்
மரக்கட்டைகள் - சிக்னல்
கார்பைட் தடவிய
பழங்களாய்
மின்னுகின்றன
நஞ்சூட்டப்பட்ட சில
நவீனத்து - நட்பு
ஆசைகளை
அடகு வைத்து .....
தேவைகளை
வைப்பிலிடும் - ஆடம்பரம்
ஆபிரிக்கக் குழந்தையாய்
கையேந்துகிறது - நட்பு
ஹாய்க்கும் பாய்க்கும் இடையில்
வந்து போன
இன்ச் இடைவெளியில்
தன்னையும் அறிமுகப்படுத்தச் சொல்லி
அடம் பிடிக்கும் குழந்தையாய் - நட்பு
யானையிடம் கொடுக்கப்பட்ட
வெள்ளிப்பாத்திரமாய்
யாருக்காகவோ பிச்சை எடுக்கும்
நீ யாரோ ...
நான் யாரோ...
வாழ்க்கை - வீசா
போதும்......
எங்கே....
அந்த இளம் காலத்து நண்பர்கள்
மண்ணறைக்குள் சிலர் போக
மனதளவில் சிலர் வீற்றிருக்க
எஞ்சியவர் எங்கே ?....
தொலை தூரத்தில் பலர்
தொலைந்தவர்கள் பலர்
தொலைத்தவர்கள் பலர்
தொட்டதற்கு எல்லாம் - நட்பை
தொலைத்தவர்களும் உளர்
தேடுங்கள் ..
பூட்டி வைத்திருக்கும் அந்த நாள் நட்பை.
தங்கம் போல் அது அப்படியே இருக்கும்
தட்டுங்கள் அதன் தூசியை - ஈகோ
தேடுங்கள்
அதன் விலாசத்தை - நட்பு
உங்களுக்காகவே அது உயிரோடு இருக்கும்.
வருடங்கள் கடந்த பின்னும்
நீங்கள் கொடுக்கும் ஒரு மூச்சுக் காற்றில்
மீண்டும் ஒரு முறை
உயிர் பிழைக்கும் சதை இழந்த - சங்கு
நட்புக்கு விடுமுறை வேண்டாம்
நட்புக்கு விதிமுறை வேண்டாம்
நட்புக்காகவும் இருக்கட்டும் -உங்களின்
ஒவ்வொரு விடுமுறையும்
தேடுங்கள் ..
நீங்கள் இருக்கும் ஒரு ஒரு நாட்டிலும்
ஒரே ஒரு புன்னகை
ஒரு கோடி நன்மை - பம்பர் பரிசு
இப்படிக்கு நட்பு ....
Natheer Sheriff