பின் ஒரு நாள்

பின் ஒரு நாள்
-கிருஷ்ணா

மிகப் பிரமாண்டமான ஏழு மாடிக்கட்டிடம். அதன் சுற்றிலும் செங்கல் மற்றும் சிமெண்டால் ஆனசுவர்களை காணமுடியவில்லை. எல்லாம் கண்ணாடியால் கட்டப்பட்டு சூரிய கதிர்களைத் தவிர்க்க உள்ளே வெண்திரை விரித்திருந்தார்கள். தரையில் உயர்ரக டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்தது. இதைப்போல ஆறு கட்டிடங்கள் இருந்தன அந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வளாகத்தினுள்.

மணி ஆறு அடித்த வேளையில் பள்ளியிலிருந்து மாணவர் கூட்டம் வெளியேறுவது போல் விட்டால் போதுமென பொறியாளர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

"மீனா, போக போக இந்த வேலையே பிடிக்காம போயிடும் போல இருக்கு.." அப்பொறியாளர் கூட்டத்தில் நடந்து கொண்டே சொன்னான் கபிலன்.

"இப்பதாண்டா தம்பி வந்துருக்க. அதுக்குள்ளயா ?" சற்று உரிமையுடன் சொன்னாள் மீனா. கபிலனை விட மூன்று வயது அதிகம். அவனுக்கு முன்பிருந்தே அந்நிறுவனத்தில் பணிபுரிபவள்.

மீனா சொன்னதைக்கேட்டானோ இல்லையோ தெரியாது. ஏதோ ஆர்வமாய் அலைபேசியில் செய்துகொண்டிருந்தான் அதுகண்டு மீனாவும் அதற்குமேல் பேசவில்லை.

சில நிமிடங்களுக்கு பிறகு..

"மீனா.. பானு மெசேஜ் பண்ணிருக்கா.."

"யாருடா அது ?? எனக்கு உன் பிரண்டுன்னு சொல்லிருக்க அவ்வளவுதான்" மீனாவின் கண்கள் ஆர்வத்தில் விரிந்த்தன.

"காலேஜ் பிரண்ட் தான். எட்டு மாசம் பேசாம இருந்தா இப்ப மெசேஜ் பண்ணிருக்கா"

"ஏன் பேசாம போனா ?"

"ரெண்டு வருஷம் நல்லா பேசிட்டு இருந்தோம். ஒரு நாள் போன்ல என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டேன். அபப போன கட் பண்ணவ நான் எவ்ளோ டிரை பண்ணியும் பேச மாட்டேண்டா"

"நான் நீ ஏன் அப்டி கேட்டன்னு கேட்க மாட்டேன். இப்ப என்ன சொல்றா?" மீனாவின் செவிகள் கபிலன் சொல்ல போவதைக் கேட்க ஆர்வமாய் சற்று வளர்ந்து விட்டது.

"வர்ற பதினெட்டாம் தேதி பாக்கலாம்னு சொல்லிருக்கா.. அது அவளோட "பர்த்டே" அவன் சிரித்த சிரிப்பில் உதடுகள் விரிந்து, பற்களை வெளிக்காட்டிக் கொண்டன.

"அபப இன்னும் இருபது நாள்ல முடிவு தெரிஞ்சிடும் " மீனாவும் அவனுடன் சிரித்தாள்.

இருபது நாட்களுக்குப் பிறகு,

காலை 11.30 மணி. கூட்டமில்லாமல் பேருந்து வேகமாய் சென்று கொண்டிருந்தது. கபிலனின் மடியில் ஒரு பையும் கையில் அலைபேசியுடன் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான்.

" டேய். இப்ப நான் எங்க போயிற்றுக்கேன்னு தெரியுமா?" என யாரையோ அலைபேசியில் கேட்கிறான். அனேகமாக அவனது தோழனாக இருக்க வேண்டும்.

"அவதாண்டா கால் பண்ணி வரச்சொன்னா. இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சிடும் டா"
மறுமுனையில் அவன் எதோ சொல்ல "தேங்க்ஸ் டா. கண்டிப்பா வைக்கிறேன். டே. இறங்குற இடம் வந்துடுச்சுடா.. பை " என்று அலைபேசியில் பேசியவாறே பேருந்திலிருந்து இறங்கி அவளுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

சற்று அதிக நேரம் காத்திருந்தான். அவனின் இன்றைய உலகம் மறந்து போயிருந்தது. அவள் பேசாமல் அலைபேசியை வைத்த அந்த நாளின் அடுத்த நாளாகவே இன்ன்றைய தினத்தை கருதினான். மணி 12.50 யை தாண்டி வெயில் கொழுத்தியது.

எதிர்பார்த்திருந்த வினாடி எதிர்பாரா நொடியில் அவனது அலைபேசி சிணுங்கியது. பேசினான்

""ஹோய்.. எங்க இருக்க ??"

மறுபுறம் பானுவின் அதாவது பானுமதியின் குரல்

"பஸ் ஸ்டாப் ல இருந்து கொஞ்ச தூரம் நேரா வா.." சொல்லி இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கபிலனும் முன்நோக்கி நடந்தான். புதுமையைத் தேடிப் போவது போல் இருந்த்தது அவனுக்கு. அதனை அங்கு அனுபவிக்க மிகவும் மெதுவாக ஒவ்வொரு அடியை எடுத்து வைத்து போய்க்கொண்டிருந்தான்.

பல சுடிதார்களையும், புடைவைகளையும் பார்த்து ஏமாந்த பின் உண்மையில் அவன் முன் அவள். அவன் வாய் திறந்தது சத்தம் வராமல் சிரிப்புடன் ஆனந்தமுற்றான்

"ஹேய்.. என்ன இது? கும்னு இருக்க.." உண்மையை சொல்லிவிட்டான்.

"என்ன சொல்ற .?" சிரிப்புடன் வெக்கப்பட்டாள் பானுமதி.

"எட்டு மாசமா என்ன பாக்காத்துனால நல்லா சாப்டு கொஞ்சம் குண்டாயிருக்க.." பேசிக்கொண்டே நடக்க தொடங்கினார்கள்.

சிரிப்பை மட்டும் பதிலாய் உரைத்து வேறொன்றை சொன்னாள் பானுமதி.

"இங்க பார்.. நீ பிச்சுட்டுப் போன ஐ.டி கார்ட் டேகை (tag) இன்னும் மாத்தாம வச்சுருக்கேன்.. மாத்தணும்."

"என் ஞாபகமாவா??." கேட்ட அவன் பேச்சை மாற்ற நினைத்து "குடை எடுத்துட்டு வந்துருக்கலாம்" என்றான்.

"ஹேய். நானும் அதான் சொல்ல வந்தேன் ஆனா உனக்கெதுக்கு குடை? வேணாம்."

"எனக்கு குடை வேண்டாம். எனக்கிப்போ ஜில்லுனு தான் இருக்கு. உனக்கு சொனேன். சாப்டலாமா?"

பானுமதி "ஹ்ம்ம்" என்றவாறு தலை ஆட்டினாள்.

சற்று நேரத்திற்கு பின்,

இருவரும் ஒரு பிரியாணி கடையில் வேண்டுவனவற்றை சொல்லிவிட்டு காத்திருந்தனர்.

பானுமதி அலைபேசியில் மூழ்கியிருந்தாள். கபிலனோ அவளெதிரே அமர்ந்து அவள் விழிகலேயே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். கண்களை சிமிட்டவும் மறந்திருந்தான்.

பானுமதி சட்டென்று பார்வையை மாற்றி அவனைப் பார்த்தாள். உடனே அவன் தலைகுனிந்து அவனது அலைபேசியை பார்த்தான்.

இதில் பானுமதிக்கு முன்பு இவர்கள் இருவரிடையே நடந்த உரையாடல் நினைவுக்கு வந்தது.

"சொல்லணும்னு நெனைச்சுட்டு இருந்தேன். இன்னைக்கு ஒரு சூப்பரான பொண்ண பார்த்தேன். அப்பா! அப்டி இருந்துச்சு!!" பானுமதியிடம் விவரித்து கொண்டிருந்தான் கபிலன்.

"எண்டா இப்படி பாக்குற பொண்ணுங்க பின்னாடியெல்லாம் சுத்துறீங்க?"

"ஹோய் .. பாக்குற எல்லா பொண்ணுங்க பின்னாடியும் போகமாட்டோம். நாங்க ஒரு பொண்ண பார்த்துட்டு இருக்கும் போது டக்குனு அவ பாக்க, நாங்க வெக்கப்பட்டு தலை குனியுறோம்ல அந்த பொண்ணு பின்னாடிதான் போவோம்"
உரையாடலை நினைத்த பானுமதிக்கு சிரிப்புடன் நாணமும் வர தலைகுனிந்து மீண்டும் அலைபேசியில் நுழைந்தாள்.
உண்டி வந்தது. உரிமையுடன் எடுத்து அவளுக்கு பரிமாறினான். அவள் மெல்ல மெல்ல எடுத்து சாப்பிட்டாள். இவன் எங்கு சாப்பிட? மனது முழுவதுமாக நிரம்பியிருந்தது. தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சினிமா, பெற்றோர் தோழர், தோழியர் என பேச்சுகள் தொடர்ந்தன.இருவரில் எவரும் அதிகமாய் பேசவில்லை. சரியா தவறா கேள்வியைப்போலவே இருந்தது அந்த உரையாடல்.
மதிய உணவு முடிந்து வெளியே வந்தனர். முன்பு அவர்கள் வந்த வழியிலேயே இரண்டு நிமிட அமைதிப் பயணம். எவரும் பேசவில்லை. மௌனம் மௌனம். அதை கபிலன் கலைத்தான்.

"ரொம்ப மாறிட்ட பானு. ப்ரீ ஹேர் விட்டுருக்க. லைட்டா உடம்பு போட்ருக்க. முன்ன விட அளவா அழகா சிரிக்கிற.." கபிலன் முயன்றும் அவளிடத்தில் மௌனம் மட்டுமே.

"என்ன பானு யோசிக்கிற? ஏதாவது சொல்லணும் னு நினைக்கிறாயா?" அடுத்த முயற்சி! அழுத்தமான முயற்சி.

இப்போது பானுமதி அவனைப் பார்த்து குறுநகையுடன் " ஒண்ணுமில்லை" என்றாள்.

கபிலன் வந்திறங்கிய பேருந்து நிறுத்தம் வந்தது. அங்கே கூட்டம் குறைவாக அங்கொருவருவர் இங்கொருவராய் நின்றிருந்தனர்.

அவளை நிறுத்தினான். அவன் விழிகள் நேராய் அவளின் விழிகளை நோக்க தனது கையை நீட்டினான்.

"ஹேப்பி பர்த்டே பானு "

அவளின் இதழ்கள் நன்றாய் விரிந்தன. அவளும் கை கொடுத்தாள். கபிலனின் கையில் அவள் கை பட்டதும் சற்று நேரத்தில் கையை உதறினான். அவன் வாய் நிறைய புன்னகை!

"என்னாச்சு??" திடுக்கிட்டாள் பானுமதி.

"இவ்ளோ மென்மையா பஞ்சு மாதிரி பிஞ்சு கை மாதிரி இருக்கு" கத்தினான் அவன். பின் ஏமாற்றம் வரத்துவங்க அதை போக்க மீண்டும் கையை நீட்டினான்.
இரு கைகளும் இணைந்தன. அவள் கையை விட அவனுக்கு மனம் வரவில்லை. மென்மையின் மென்மையை இப்போது அவன் அனுபவித்தான்.

பின்பு அவளுக்காக வாங்கிய பரிசுகளை கொடுத்தான். முதலில் வர்ண காகிதத்தால் சுற்றப்பட்ட பரிசுப் பெட்டி கொடுத்தான். சிரிப்புடன் வாங்கினாள். பின் சாக்லேட் கொடுத்தான். மீண்டும் அதே சிரிப்பு மட்டுமே. இறுதியாய் அவளுக்கு பிடித்த"ஜெல்லியை " கொடுத்தான். துள்ளிக்கொண்டு வாங்கி உடனே அதை வாயில் போட்டுக்கொண்டாள்.

"சரி பானு. வாழ்த்துகள். கிளம்புறேன்."

இப்போது எவ்வித உணர்வும் அவளிடம் காணப்படவில்லை. அழ்ந்த யோசனையில் இருப்பது மட்டும் தெரிந்தது. விடைபெற மனமில்லாமல் சென்றவன் இரண்டடி வைத்த பிறகு திரும்பி தனது இடக்கையை நீட்டினான். அடுத்த வினாடி யோசிக்காமல் அவளது இடக்கையால் பற்றினாள்.

"பாப்போம்.." எனச் சொல்லி திரும்பாமல் வேகமாய் நடந்தான். திரும்பினால் அங்கேயே இருந்து விடுவமோ என்ற பயம் அவனுக்கு.

சற்று தூரம் போய் பாதசாரிகள் சாலையை கடப்பதற்காக போடப்பட்டிருந்த மேம்பாலத்தின் மீது ஏறி நின்றான். வாகனகள் கீழே அங்கும் இங்கும் வேகமாய் போய்க்கொண்டிருந்த்தன. அலைபேசி சினுங்கியது. அவளாய் இருக்குமென ஆவலாய் எடுத்து பின் சோகமாய் "சொல்லுடா" என்றான்.

"என்னடா அச்சு??" மறுமுனையில் அவனது தோழன்.

"எல்லாமே நல்லா போச்சுடா..அவ என்ன திட்டல. சாப்டோம். பேசினோம். அவ கம்பனிகுள்ள போயிட்டா. நான் வந்துட்டேன். கண்டிப்பா போன பண்ணுவா. பாரேன்."

கபிலன் பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென அலறினான்.

"டே.. டே.. போன வைடா. அவதான் கூப்டறா.."

அவளது அழைப்பை ஏற்று, அலைபேசியை காதில் வைத்தான். சற்று நேரம் அமைதியாய் இருந்தது. மெதுவாய் "ஹலோ" என்றான்.

"எங்க இருக்க ? ' அவளின் குரல் கேட்டது.

"பஸ் ஸ்டாப் ல..பஸ்ஸுக்காக வெய்ட் பண்ணறேன்." இவன் வேகமாய் முடித்து அவளின் பேச்சுக்காக காத்திருந்தான்.

இருவரின் வாயிலிருந்தும் மௌனமே வெளிவந்ததது. பானுமதி அமைதியாகவே இருந்தாள். கபிலன் விட்டுகொடுத்தான்.

"பானு. ஏதாவது சொல்லணும் னு நினைக்கிறாயா??" ஐந்து வினாடிக்கு பின் பதில் வந்தது.

"பாத்திரமா போயிட்டு வா.. உடம்ப பாத்துக்கோ"

அழைப்பு துண்டிக்கப்பட்டது. அதே நேரம் ஒரு மகிழுந்து சாலையில் வேகமாய் மிகுந்த சத்தத்துடன் ""சர்ர்ர்ர்" என பாய்ந்து சென்றது.

அதையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மகிழுந்து வெகுதூரம் சென்றதும் பார்வையை மாற்றாமல் அவன் வாய் ஏதோ முணுமுணுத்தது.

"நீ மாறவேயில்லை பானு"

-----------முற்றும்-------

எழுதியவர் : கிருஷ்ணா (20-Mar-16, 7:11 pm)
Tanglish : pin oru naal
பார்வை : 761

மேலே