என் அன்னை என் தாயை பற்றி

உலகிற்கு என்னை
அறிமுகமாக்கி,
உலகையே எனக்கு
உறவுமாக்கிய என்
முதல் தோழி!

கருவறை நாட்களில்
கருத்துடன் காத்து-என்னை
பிறப்பிக்கும் பொருட்டு
புதுபிறவி கண்டாய்!!

தள்ளாடிய என்
தளிர்நடைக்கும்
புரியாத என்
புது மொழிக்கும், நீயே
முதல் 'இரசிகை'!

வீட்டுக்குள் கவனிப்பில்
அன்பையும்
வெளியில் கண்டிப்பில்
அக்கறையையும்
தெளிக்கும் உன்
மொழிகள்!!

எந்தன் கண்ணில்
தூசு கண்டால்,
உந்தன் கண்கள்
கலங்கிவிடும்!

என் விருப்பங்கள்
எல்லாம் உன்
விரல்நுனிக்குள்!
என் கனவுகள்
எல்லாம் உன்
கண்களுக்குள்!!

உறவுகள் விலகி
உரிமைகள் சிதறி
வாழும் போதிலும்-என்
உணர்வுகள்
உணர்ந்திட மறுப்பதில்லை!

எளிமையின் இனிமையும்
எதார்த்தத்தின் இயல்பும்
இரக்கத்தின் சிறப்பும்
கற்றேன் உன்னிடம்!!

ஏழ்மை நிலையிலும்
ஏமாற்றமும் ஏக்கமும்,
அறியவில்லை
உன் வளர்ப்பில்!

இறைவன் என்
எதிரில் வந்தால்
இனி ஒரு பிறவி
தந்தால்,
என் அன்னைக்கு நானே
'தாயாகும்'
வரம் கேட்பேன்!!...

எழுதியவர் : தேன்கவி (8-May-16, 8:27 pm)
பார்வை : 349

மேலே