இறந்தகாலங்கள் இறந்ததாகவே இருக்கட்டும்
புரியாத கேள்விகள்
புரிந்தோடிய பிறகு
வடியாத கண்ணீரும்
வடிந்தோடியது பார்!
வாவென்ற சொல்லுக்கு
வந்துநின்ற பிறகு
போயென்ற சொல்லுக்குள்
வாயென்றேன்! பார்!
தவறுகள் செய்யாத
மனிதஇனம் இல்லையடி!
தவறுகள் மறைக்காத
மனிதஇனம் சொல்லடி?
மன்னித்த பிறகுதான்
நீ ஓ'யென்று அழுதாயே!
மன்னித்த பிறகுநான்
நினைத்து உருகி அழுதேனே!
திருமணம் முடிந்த பின்
திடீரென்று சொன்னதால்
திடுக்கென்று ஆனதடி!மனம்
தீப்பிடித்து எரிந்ததடி!
காதலனோடு கலவி கொண்டதை
காதிரண்டும் கேட்டவுடன்
கண்கலங்கி நின்றனடி !கடும்
கோபம் கொண்டனடி!
கருகலைத்த பிறகு தான்
கல்யாணம் செய்தேன் என்றாய்!
கடும் தண்டனை கொடுத்தாலும்
கண்கலங்கி ஏற்பேன் என்றாய்!
புரியாத கேள்விகள்
புரிந்தோடிய பிறகு
வடியாத கண்ணீரும்
வடிந்தோடியது பார்!
விடியல் வரும் முன்னே
மனம் இதை மறக்கட்டும்!
விடிந்தபின் புது வாழ்வுக்கு
எண்ணங்கள் தோன்றட்டும்!
அழியாத தவறுகள்
அழிந்தே போகட்டும்!
இறந்த காலங்கள்
இறந்ததாகவே இருக்கட்டும்!!!