மறந்தும் பிறன்கேடு சூழற்க

மேகமே! மேகமே!
நரகம் செல்லும் வழி
நயந்து எனக்குச் சொல்வாயா
எனக் கேட்டான் ஓர் மனிதன்!

எதிர்பாராக் கேள்வி கண்டு
அதிர்ந்தது சின்னஞ்சிறு மேகமே!
அய்யா! நீ புத்தி நிதானத்திலா
இல்லை பேதலித்தாயா!

சொர்க்கம் என்றொன்று வானுலகில்
உள்ளதை நீ அறியாயோ – இன்ப
உலகு! ஆடல் பாடல் உண்டு
அழகு ரம்பை மேனகை உண்டு!

இன்ப உலகு இருப்பது அறிந்தால்
நரகம்தான் கேட்பாயோ – மானிடனே
இரவுபகல் என்று எப்பொழுதும் சொர்க்கத்தில்
ஆட்டம்தான்! களியாட்டம்தான்!

இவையெல்லாம் நம் பூமிதனில் மாநிலத்தில்
சுவையுடன் அனுபவித்து விட்டேன் முற்றிலுமே!
குடித்தேன்! கணிகையருடன் சல்லாபித்தேன்!
சேர்த்து வைத்தேன் செல்வத்தை ஸ்விஸ்சில்!

கட்டப் பஞ்சாயத்து செய்தேன் – சொகுசு
கார் வாங்கி சின்னவீடு, பெரியவீடு எல்லாம்
சுற்றினேன்: சதிகாரர்கள் போட்டு விட்டனர்!
பாபம் தொலையச் செல்லவேண்டும் நரகம்!

ஓ! நீவிர் யாரென்று கண்டு கொண்டேன்!
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. குறள் 204

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-May-16, 1:01 pm)
பார்வை : 72

மேலே