கண்ணுக்குத் தெரியாத அஸ்திவாரம்

....................................................................................................................................................................
அறிமுகப்படுத்தியது தாய்தான்..
சிவப்பு வெள்ளைக் கட்டங்களையும்
சிப்பாயையும் தேரையும்...

எப்போதுமே தாய் தோற்பாள்...
தோத்தாங்குழி தோத்தாங்குழி என்று சிரித்தால்
கண்பாவை அர்த்தத்துடன் எங்கோ பார்க்கும்..
கன்னத்தை நாவால் துழாவி
பெருமிதம் கொள்ளும்..

சதுரங்கப் போட்டி சாம்பியனானேன்..
மாவட்டம், மாநிலம் தாண்டி
தேசிய அளவு...
இன்னும் செல்ல வேண்டும்
சர்வதேச அளவு..

பயிற்சியாளர்களைப் பார்த்து வருகிறேன்..
உலகம் தெரியாத அம்மாவிடம்
உட்கார்ந்து கொண்டிருந்தால்
என்ன கிடைத்து விடும்?

பெருவயதுப் பேராசிரியரிடம்
பேசிக் கொண்டிருந்தேன்..
பல வருடமுன்பு
இந்தியர் வென்றாராம் பட்டம்;
இனி ஒருத்தரும் வரவில்லை..
இந்நாள் வரை இது திட்டம்..

பட்டம் வென்ற இந்தியரைப்
படிக்க ஆவல் கொண்டேன்..
சர்வதேச அளவில் வெற்றி பெறுவது
சாமானியமா?

ஆவணத்தைப் புரட்டி
புகைப்படத்துடன் பெயர் கண்டேன்..
எ.. எ.. எ...
என் தாய்..! ! ! ! !

எழுதியவர் : அருணை ஜெயசீலி (6-Sep-16, 2:15 pm)
பார்வை : 155

மேலே