சன்னதிக் காதல்
சன்னதிக் காதல் !
இரு புருவ நெற்றியிடை
வட்டநிலா பொட்டிட்டு
கருங் கூந்தல் சுருளிடையே
வாசமலர் சூட்டிவைத்து
வரையிட்ட இதழிடையே
வாஞ்சையிலே புன்னகைத்து
கட்டிய நெஞ்சகத்தானை
விழிவழியே வரவேற்றாள்!
தோள் சரிந்த முந்தானை
பட்டும் படாமல் சரியவிட்டு
இடை விலகிய இடைவெளியை
பக்குவமாய் சீரமைத்து
முன் விழுந்த கரிகூந்தலை
முடிப்பதுபோல் பாவனித்து
சொல்ல முடியா சேதியெல்லாம்
சொல்லாமல் சொல்லிவிட்டாள்!
கன்னமிடும் பார்வையாளன்
காணாமல் கண்டாலும்
மைவிழியாள் மெய் செய்தி
பொய்யாக உணராது நடித்து
ஓடி அணைக்கத் துடித்தாலும்
ஓரக் கண்ணை ஓடவிட்டு
நாடி நாணி நின்றவளை
நாடி பார்த்து உள்ளுள் ரசித்தான்
மார்பிடை ஆடிய மாங்கல்யம்
மாராப்பிடையே மன்மதனை ஈர்க்க
வெட்கத்தில் வெந்தனலாய் நெஞ்சம்
பக்கத்தில் வந்ததால் பற்றிட
பித்தம் தலைக்கு ஏறி
மெய் யுத்தத்தில் முடிந்தது
சொர்க்கத்தில் கூடிய இன்பம்
வர்க்கமாய் கோடி சுகமானது!
மையிருட்டு வானிடையே
வலம் வந்த மேகங்கள்
விட்டு விலகி ஓடியதால்
விழி பிதுங்கிய விண்மீன்களும்
திரைமறை தேய்பிறை நிலவும்
விடியும்வரை கண்விழித்து
கண்படாது காவல் நின்றன
கட்டவிழ்ந்த சன்னதிக் காதலுக்கு!
கவிதாயினி அமுதா பொற்கொடி