கானல்நீரான அவளது கனவுகள்

அன்று..,
மழலையாய் கொஞ்சிப் பேசி
எனை நாளும் மகிழவைத்தாய்...

இன்று..,
மங்கையாய் வளர்ந்துவிட்டதாலா
என் மனதை வதைத்துக் கொன்றாய்...?

வரையவே இயலாத கொடிய சொற்களை
உனக்குக் கற்றுத் தந்தது யார்...?

உன்னுடன் கைகோர்த்து நடந்து
நயவஞ்சக எண்ணத்தை தினமும் சுவாசித்துக்கொண்டிருக்கும்
நாடறிந்த நவயுக தோழிகளா...?

இல்லை..,
சிறுவயதிலே பழுத்து சீரழிந்துகொண்டிருக்கும்
சிறகுகளையுதிர்த்த செந்நீர் உறவா...?

அவர்கள்..,
பாசத்தோடு உனைப் பருகவைப்பது
பார்கடலில் கடைந்தெடுத்த அமுதமென நினைத்தாயா...?

நிச்சயமாக இல்லை..,

அப் பார்கடலில் கிடைத்த விஷம்...
அதை நீயுணரும் காலம் வரும்வரை காத்திரு...

இப்போழுது ஆணவம் உன்னை
அதன்பிடியில் சிறைபிடித்திருப்பதனால்
மெய்யும் பொய்யாகத்தான் தெரியும்...

கள்ளிச்செடிகள் நிறைந்த காடுகளைக்
கடந்தவனுக்குத் தெரியும்...
அதன் முட்களின் கீறல்களும்... வேதனைகளும்...

ஆணவம் என்ற தாகம்கொண்ட நீ
கானல்நீர் கைகளில் அடங்காது என்றால் கேட்பாயா...?

கொம்புத்தேன் பருகியவனுக்கு
அதைப்பற்றிய விளக்கம் அவசியமில்லையே...!

கலங்கப்பட்ட தேனைப் பருகிவிட்டு
கசக்கின்றது என்பாயா...?

நாட்கள் பலகடந்து சேமித்துவைத்த
கலங்கப்பட்ட தேனின் தன்மை மாறாததால்...

சுவையாய் உள்ளதென நீயும் சுவைத்து
நன்றாக இருப்பதாய் எண்ணுகிறாயா...?

அதன் விளைவுகள்..,
காலங்கள் சற்றே கடந்துசெல்லும்போது
கடும்பிணிக்கு உனை உட்படுத்தும்...

அன்று..,
உறுதியாக உனக்கு...
அன்பினை வெளிப்படுத்தும் பிணிநீக்கி
ஆழ்கடலில்கூட கிடைக்கப்போவதில்லை...

ஏனெனில்..,
மெய்யை உதறித் தள்ளிவிட்டு
பொய் உறுதியாய் நிற்கும் என நீ எண்ணிருக்கும் அனைத்துமே
புளித்துப்போய் பூஞ்சைகளாகியிருக்கும்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (10-Oct-16, 10:05 am)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 408

மேலே